spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் 2ம் கட்டமாக ரயில் நிலையங்கள் மேம்படுத்தல்; தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் 2ம் கட்டமாக ரயில் நிலையங்கள் மேம்படுத்தல்; தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

- Advertisement -
pm narendra modi

இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டும், ‘அம்ரித் பாரத் ரெயில் நிலையம்’ என்ற திட்டத்தின் கீழ் நவீனமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி – மின்படிக்கட்டுகள், உள்ளூா் தயாரிப்பை முன்னிலைப் படுத்தும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ அமைப்பது உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இந்த ரயில் நிலையங்களில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். அந்தப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலக தரத்தில் நவீனமாக மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தில்லியில் இருந்தபடி, காணொளிக் காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள 554 ரயில் நிலையங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தில்லியில் நடந்த இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ், ராவ் சாககேப் பாட்டில் தன்வே, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடு முழுவதும் அந்தந்த மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டிய 554 ரயில் நிலையங்களில் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் நவீனமாக மேம்படுத்தப்படுகின்றன.

இந்த 34 ரயில் நிலையங்களில் சென்னை கோட்டத்தில் 7, சேலம் கோட்டத்தில் 8, திருச்சி கோட்டத்தில் 4, மதுரை கோட்டத்தில் 13, கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9, திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் தென்னக றயில்வே சாா்பில் 32 ரயில் நிலையங்கள், தென்மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டிய தமிழகத்தில் உள்ள 34 மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்கள் விவரம் …

1. திருநெல்வேலி சந்திப்பு
2. கும்பகோணம்
3. ஈரோடு சந்திப்பு
4. அம்பத்தூர்
5. திண்டுக்கல் சந்திப்பு
6. ஓசூர்
7. தர்மபுரி
8. திருச்செந்தூர்
9. மேட்டுப்பாளையம்
10. மாம்பலம்
11. சென்னைக் கடற்கரை
12. பரங்கிமலை
13. திருப்பத்தூர்
14. புதுக்கோட்டை
15. கிண்டி
16. நாமக்கல்
17. பழனி
18. காரைக்குடி சந்திப்பு
19. மொரப்பூர்
20. சின்னசேலம்
21. கோவை வடக்கு
22. பொம்மிடி
23. ராஜபாளையம்
24. ராமநாதபுரம்
25. சென்னைப் பூங்கா
26.பொள்ளாச்சி சந்திப்பு
27. கோவில்பட்டி
28. தூத்துக்குடி
29. அம்பாசமுத்திரம்
30. பரமக்குடி
31. மணப்பாறை
32.விருத்தாசலம் சந்திப்பு
33. திருவாரூர் சந்திப்பு
34. திருவண்ணாமலை.

இவற்றில், திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் ரூ.270 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது. தற்போது ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமாக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையமும் நவீனமாக்கப் படுவது நெல்லை வாழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்தப் பணிகளை இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த விழாவில் சென்னையில் கடற்கரை, கிண்டி, பரங்கிமலை ஆகிய 3 இடங்களிலும் அதிகாரிகள் பங்கேற்றனர். பரங்கிமலையில் நடந்த விழாவில் ஆளுநர் ரவீந்திர நாராயண்.ரவி கலந்து கொண்டார். இது குறித்து அவர் எக்ஸ் சமூகத்தளப் பதிவில் வெளியிட்ட செய்தியில்…

அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழகத்தில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழகத்தின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும். தொலைநோக்கு தலைமையின் கீழ், ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தற்போதைய திட்டங்கள் ரூ. 45,769 கோடிக்கு மேல் உள்ளதால், மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட ஆயத்தமாக உள்ளது… என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசால் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்களும் சர்வதேச தரத்தில் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் திறந்தவெளி கூரை அமைக்கப்படும். பயணிகள் பொருட்கள் வாங்குவதற்கான ஷாப்பிங் மண்டலம் உருவாக்கப்படும். பயணிகள் நிலையங்களில் விரும்பிய உணவுகளை சாப்பிடுவதற்கு உயர் ரக உணவுகள் கொண்ட ஓட்டல்களுடன் உணவு சந்தையும் அமைக்கப்படும். குழந்தைகள் விளையாடும் பூங்காவும் இந்த ரயில் நிலையங்களில் இடம் பெற்றிருக்கும்.

மேலும் பயணிகள் வசதிக்காக நிலையத்துக்குள் செல்லுவதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு ஒரு வழியும் என தனித்தனி வாசல்கள் அமைக்கப்படும். ரயில் நிலையம் அருகிலேயே பல அடுக்குகள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் இடம் உருவாக்கப்படும். வயதான பயணிகளை கருத்தில் கொண்டு லிப்ட் வசதிகளும் செய்யப்படும்.

நகரும் படிக்கட்டுகள், சொகுசு ஓய்வு அறைகள், காத்திருப்பு கூடங்கள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும். இதன் மூலம் இந்த நவீன ரயில் நிலையங்கள் ஒருங்கிணைந்த பல வகை இணைப்புகளுடன் அந்தந்த பகுதி சமூக பொருளாதார செயல்பாடுகளின் மையமாகவும் உருவெடுக்கும்.

ரயில் நிலையங்களின் மேம்பாட்டுத் திட்டம் மட்டுமல்லாது, பிரதமர் மோடி இன்று 1,500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கும் அடிக்கல் நாட்டினார். ரூ.41 ஆயிரம் கோடி செலவில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் 121 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் தமிழகத்தில் அமைய உள்ளன.

இந்தத் திட்டங்கள் மூலம் முக்கிய பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடையில்லாமல் இயங்கும். பயணிகள் ரயில் நிலையங்களை கடப்பதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe