கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிப்பதால் கடல் மாசடையும், விஷமாகும் என்று பயமுறுத்துபவர்களுக்காக இந்தப் புவியியல் நில அடிப்படை அம்சங்களை சற்றே அறிவியல் ரீதியாக விளக்க வேண்டியுள்ளது.

கடல் நீர் நிலையானதல்ல. அலைகளும், ஒதங்களும் மட்டுமேயல்ல, நீரோட்டங்களும் கடல் நீரின் தன்மையை பரிபாலிக்கின்றன.

கடல் நீரோட்டம், உலகளவிலானது, ஆங்காங்கே மண்டல அளவிலானது. இவை அனைத்தும் வளிமண்டல தட்பவெப்பம், கடல் நீர் வெப்பம், உப்பு, அலை, ஓதம், காற்று, கடலடி புவியமைப்பு, நீரின் அடர்த்தி ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

கங்கையின் முகத்துவார பகுதியை சற்று ஊன்றி கவனிக்கவும். கங்கை நதியால் கொண்டுவரப்படும் நீரும் மண்ணும் சேர்ந்து மிகுஅடர்த்தி கொண்டுள்ளதால், அது வங்கக்கடலில் உள்ள நீரைவிட அதிக அடர்த்தியும், கனமும் கொண்டுள்ளதால் அது கடல்நீரில் மூழ்கி, கடலினடியில் ஒரு நதியாக ஓடுகிறது.

அந்த நதி சென்னைக்கு கிழக்கே வரை ஓடுகிறது. இந்த கடலடி நதி கடலடியில் நிலத்தின்மேலே காணப்படும் நதிப்பள்ளத்தாக்கு போலவே இருப்பதை காணவும்.

அதுமட்டுமல்ல, வடஇந்தியாவில் பருவமழை தொடங்கியவுடன், கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின் வெள்ளம் இந்திய கிழக்கு கடற்கரையோரம் கடல்நீரில் மிதக்கும் நன்னீர் ஆறாக பிப்ரவரி-மார்ச் மாதத்திலிருந்து ஓடுவதும், அது தென்னிந்தியாவில் தூத்துக்குடி வரை பரவுவதும், அக்டோபர் மாதத்திலிருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி செல்வதும் கடந்த 2014 -ம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, கங்கையிலிருந்து மிகு நீரை கடல் மூலம் நதிநீர் இணைப்பு பலகோடி ஆண்டுகளுக்கு முன்னரே இயற்கை செய்து விட்டது. இது நமக்கு சமீபத்தில்தான் அறிவியற்பூர்வமாக தெரிய வந்துள்ளது. #கடலிலிருந்து_குடிநீர்

ஆகவே பின்வரும் அம்சங்களை இந்த விவகாரத்தில் கவனத்தில் கொள்வது நல்லது!

  1. கடல் நீரிலுள்ள பல வகையான தனிமங்கள், உப்பின் அளவு ஒரு படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

  2. கடல் மட்டத்தில் நீரின் உப்பு, உலகெங்கும் ஒரே அளவினதாக இல்லை. பருவ காலங்களுக்கேற்ப மாறுபடுகிறது.

  3. கடல் மட்டத்திலிருந்து ஆழம் செல்லச்செல்ல உப்பின் அளவு கூடுகிறது.

  4. குடிநீர் தயாரிக்கும் ஆலைகள் கடல் நீரை 50-100 மீ ஆழத்தில் எடுக்க வாய்ப்புள்ளது, குடிநீர் தயாரித்த பின் மிச்சங்கள் கடலினுள்ளேயே தக்க ஆழத்தில் தான் செலுத்தப் படும்.

  5. இவை அனைத்தும் கடல் மட்ட, கரையோர, கடல்ஆழ நீரோட்டங்களின் சமநிலையாக்கலுக்கு உட்பட்டவை.

  6. இந்திய கடற்கரையோர நீரோட்டங்கள் கங்கை – ப்ரம்மபுத்ரா நதிகளிலிருந்து வரும் நன்னீரால் பரிபாலிக்கப்படுபவை.

  7. குடிநீர் தயாரிக்க எடுக்கப்படும் நீரின் அளவு, கங்கை – பிரம்மபுத்ரா நன்னீரின் அளவு, வங்கக் கடலின் பரிமாணம், எல்லாவற்றையும் ஒப்பிட்டால், சும்மா ஓரமா போயி விளையாடுங்கப்பா என்று தான் திடீர் பருவகாலப் போராளிகளை நோக்கி சொல்லத் தோன்றுகிறது

இந்தியாவைப் பொறுத்தவரை, கிழக்கு கடற்கரை கங்கை – ப்ரம்மபுத்ரா நன்னீரால் வருடத்தின் பெரும்பகுதி பரிபாலிக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கடற்கரையோரத்திலும், நடுக்கடற்புறத்திலும் நீரோட்டங்கள் நிகழும் திசை, பருவகால மாற்றங்கள், கங்கை, மகாநதி, க்ருஷ்ணா, கோதாவரி, காவிரி நதிகளின் மூலம் வங்கக் கடலில் கலக்கும் நீர், வண்டல் அளவுகளும் காண்பிக்கப்பட்டுள்ளது.

  • மு.ராம்குமார் (இணை பேராசிரியர், நில இயல் அறிஞர்)
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...