
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் 255 மாவட்டங்களில், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பை செயல்படுத்தும் வகையில் ஜல சக்தி திட்டத்தை ஜூலை 1 முதல் மத்திய அரசு தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
பல்வேறு மத்திய துறைகளில், இணை அல்லது கூடுதல் செயலர் அந்தஸ்தில் இருக்கும் 255 ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையைப் பெறும் மாநிலங்களில் ஜூலை 1 தொடங்கி, செப்டம்பர் 15 வரை, ஜல சக்தி திட்டத்தின் கீழ் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
வடகிழக்குப் பருவமழையின்போது அக்டோபர் 1 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
ஒட்டுமொத்தமாக, நிலத்தடி நீர் சரியும் நிலையில் உள்ள 313 பகுதிகளிலும், நிலத்தடி நீர் மிதமிஞ்சி உறிஞ்சப்பட்ட ஆயிரத்து 186 பகுதிகளிலும், நிலத்தடி நீர் மட்டம் மிகக்குறைந்துபோன 94 பகுதிகளிலும் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கான இந்த திட்டம் indiawater.gov.in என்ற இணைய தளத்தின் மூலம், மொபைல் அப்ளிகேசன்களை பயன்படுத்தி நேரடியாகக் கண்காணிக்கப்படும்.


