
இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியை ஏமாற்றி பணம், நகை பறித்த மதுரை இளைஞர் போலீசாரிடம் சிக்கினார்.
தமிழகத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக இணையதளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல பெண்கள் முன்பின் தெரியாத நபரிடம் பழகி, புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி வைத்துவிட்டு, பின்னர் அவதிப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை வில்லாபுரம் மகாலிங்கம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ்(21) இன்ஸ்டாகிரம் பயன்படுத்தி அதில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கல்லூரி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் விக்னேஷ் அந்த மாணவியிடம், எனக்கு பணக் கஷ்டம் உள்ளது. எனவே நீ எனக்கு பணம் மற்றும் நகை கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
இதையடுத்து அந்த கல்லூரி மாணவி தன்னிடம் இருந்த பணத்தையும் தான் அணிந்திருந்த நகையையும் கொடுத்து உதவியுள்ளார். ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில் , விக்னேஷ் அந்த நகை மற்றும் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார்.
மாணவி அவ்வப்போது பணம், நகையை திருப்பிக்கேட்டப்போது விக்னேஷ் அவரது அழைப்புகளை தவிர்த்தாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த கல்லூரி மாணவி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் இடம் விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷ் அந்த மாணவியிடம் நகை , பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்ற முயன்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்