
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, இன்று தில்லியில் அக்கட்சியின் முரளிதர் ராவ் முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றினார். அங்கே பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தார்.
பெங்களூரு தெற்கு மண்டல துணை ஆணையராக பதவி வகித்த அவர் கடந்த ஆண்டு திடீரென தமது ஐபிஎஸ் பதவியை உதறித் தள்ளினார். பிறகு தமது சொந்த ஊருக்கே திரும்பினார். இது பலருக்கும் மிகப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

தொடர்ந்து, தமது மாவட்டத்தில் இயற்கை விவசாயம், சமூக சேவை என்று இயங்கி வந்தவந்த அவரிடம் அப்போதே அரசியல் ஆர்வம் துளிர் விட்டது. செய்தியாளர்களுடனான சந்திப்புகளின் போது, தாம் அரசியலில் பின்னாளில் ஈடுபட விருப்பம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இளைஞர்களின் ஆதரவும் சக்தியும் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டு, மிகுந்து வந்ததால், அவர் அனேகமாக ரஜினியின் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படக் கூடும் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், ரஜினி அரசியல் கட்சி தொடங்காமல் மீண்டும் இழுத்துக் கொண்டே வந்த நிலையில், அவர் தற்போதைய பிரதமர் மோடியின் பக்கம் விருப்பத்தைத் தெரிவித்து, பாஜக., பக்கம் சாய்வார் என்று பேச்சு வெளியானது.
மேலும், கடந்த சில நாட்களாகவே அவர் விரைவில் பாஜக.,வில் இணைவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அவர், தில்லியில் தமிழக பாஜக., தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.
பின்னர் தமது அரசியல் பயணம் குறித்து அண்ணாமலை கூறுகையில், பாஜக.,வை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். பதவியை எதிர்பார்த்து பாஜக.,வில் சேரவில்லை. மோடியின் பணிகளைக் கண்டதன் காரணமாக சாதாரண தொண்டராக பாஜக.,வில் இணைந்தேன்… என்றார்.
கட்சியில் இணைவதற்காக நேற்று தில்லி சென்றவர், தொடர்ந்து பாஜக., மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். அண்ணாமலையை பாஜக., பக்கம் ஈர்த்ததில் கர்நாடகத்தைச் சேர்ந்த பிஎல் சந்தோஷின் பங்கு முக்கியமானது என்று பாஜக.,வினர் கூறுகின்றனர்.