ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.இன்று 3ம் திருநாளான காலையில்
ஆண்டாள், பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர்.


முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே பரவியிருந்தது. திருமலை, திருக்கடல் மல்லை, திருவிட வெந்தை,
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீமுஷ்ணம் போன்றவை தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்தன. வராஹப் பெருமான் பிராட்டிக்கு பல்வேறு உபதேசங்கள் செய்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இந்த உபதேசங்கள் மக்களிடம் சென்றடைய ஆண்டாளாக அவதரிக்கப் போவதாக வேண்டினாள் பிராட்டி. இத்தலத்தில் மூங்கில்குடி என்ற வம்சத்தில் முகுந்தர் என்பவருக்கு 4-வது மகனாக பெரியாழ்வாராக கருட பகவான் அவதரித்தார். நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த பெரியாழ்வார், அங்கிருந்த திருத்துழாய்ச் செடியின் அடியில் ஆடிப் பூரத்தில் அவதரித்திருந்த பெண் மகவைக் கண்டு வியந்தார். வந்திருப்பது திருமகளேயென உணர்ந்தார். தமது பத்தினியான விரஜையிடம் கொடுத்து கோதை என பெயர்சூட்டி வளர்த்தார். ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை24,இல் தொடங்கியது. பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிகின்றனர். 28ம் தேதி கருட சேவை. ஆகஸ்ட் 1ம் தேதி தேர்த்திருவிழா. 10 நாட்களும் தங்கி ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க தகுந்த வசதிகள் இந்து அறநிலையத்துறை பாகவத உத்தமர்களால் செய்யப்பட்டு உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவத்தில் இன்று 3ம் திருநாளான காலையில்
ஆண்டாள், பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர்.
இரவில் தங்க பரங்கி நாற்காலியில் ஆண்டாள் , அனுமன் வாகனத்தில் பெருமாள் எழுந்தரும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்புத்தூரில் குழுமியிருந்தனர் .ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று 2ம் திருவிழாவான காலையில்
ஆண்டாள் தங்கப் பல்லக்கு, பெருமாள் தந்தப் பல்லக்கில் எழுந்தருளினர். இரவில் சந்திர பிரபை மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர்.


கண்ணபிரானை எண்ணி பாவை நோன்பு மேற்கொண்ட ஆண்டாள் நாச்சியார், கிருஷ்ணாரண்யம் எனப்படும் திருக்கண்ணபுரம் குறித்து
நாச்சியார் திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கண்ணபுரத்தில் நீலமேகப் பெருமாள், கண்ணபுர நாயகியுடன் எழுந்தருளி இருக்கிறார். உற்சவர் சௌரி ராஜன். ‘திருவேங்கடத்திலும், திருக்கண்ணபுரத்திலும் எந்தக் குறையுமின்றி மகிழ்ந்து உறையும் வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னோடு சேர்த்துக் கொள்வான் ஆகில் நீ கூடிடு கூடலே’ என்பது ஆண்டாள் பாசுரத்தின் எளிய விளக்கம்.
நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலை அழகர் குறித்து ஆண்டாள் 11 பாடல்கள் பாடி உள்ளார். ‘நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு’ என்கிற பாசுரம் மூலம் அழகருக்கு 100 தடா வெண்ணெயும், 100 தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாக ஆண்டாள் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துதான் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அழகர் கோயிலில் அமர்ந்த நிலையில் ஆண்டாள் சேவை சாதிப்பது அரிய திருக்காட்சியாகும்.
