தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து அதே நேரத்தில் ரயில் வருதைப் பார்த்து, டார்ச்லைட் அடித்து ரயிலை நிறுத்தி, பெரும் ரயில் விபத்தை தவிர்த்த தம்பதியினருக்கு ரயில்வே சார்பில் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே, தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்தச் சம்பவத்தின் போது, அந்த ரயில் பாதையில், ஆற்றிங்கல் சிறப்பு ரயில் வருவதைக் கண்டு, தண்டவாளத்தில் ஓடி, டார்ச் லைட் அடித்து நள்ளிரவு நேரத்தில் ரயில் ஓட்டுநருக்கு சரியான வகையில் சிக்னல் கொடுத்து, உஷார் படுத்தி, ரயிலை நிற்கவைத்து, பெரும் விபத்தைத் தடுத்த புளியரைப் பகுதியை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மனைவியான வடக்குத்திஅம்மாள் ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களது சாமர்த்திய செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் அந்த தம்பதியினரை நேரில் அழைத்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையத்திற்கு சண்முகையா மற்றும் அவரது மனைவியை அழைத்து வந்து பெரிய அளவிலான விபத்தை தடுத்த தம்பதியினருக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மதுரை கேட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா உடன் பல்வேறு ரயில்வே துறை உயர் அதிகாரிகளும் இருந்தனர். செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் தொடர்பாளர் ராமன் உள்ளிட்டோரும் உடன் இருந்து, தம்பதியைப் பாராட்டினர்.