
ஐந்தருவி சங்கராசிரமத்தின் மேனேஜிங் ட்ரஸ்டியும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலரும், தமிழ்ச் செம்மலும், சித்தவித்தை செம்மலும் ஆகிய பிரம்மஸ்ரீ .ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமது 93 ஆம் வயதில் மகா சமாதியடைந்தார்கள். அவர்களது சமாதி நிகழ்வுகள் ஐந்தருவி சங்கராஸ்ரமத்தில் வைத்து நாளை மதியம் (09.6.023) 1 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அன்னாரின் தமிழ் சேவையும் ஆன்மீகச் சேவையும் மிகவும் உன்னதமானதும் உயர்ந்ததும் ஆகும். தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலராக சுமார் 60 ஆண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவராகவும் மேனேஜிங் டிரஸ்டியாகவும் சுமார் 50 ஆண்டுகாலம் அர்ப்பணிப்போடு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சங்கரானந்தர் குரு நிழலில் அவரது ஆன்மா இளைப்பாற பிராத்திக்கிறோம்… என்று ஆஸ்ரமத்தின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.
தென்காசியில் 1927ல் தொடங்கப்பட்டு, தற்போது 96 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறது திருவள்ளுவர் கழகம். இதன் செயலாளராக இருந்தவர் சிவராமகிருஷ்ணன் . 93 வயதான இவர் தனது 13 வயதிலேயே இந்தக் கழகத்திற்காக உழைக்கத் தொடங்கினார். கடந்த 63 ஆண்டுகளாக தொடர்ந்து செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.
திருவாசகம் முற்றோதுதல் நடப்பது போல திருக்குறள் முற்றோதுதல் என்ற முறையை அறிமுகப்படுத்தியவரும் இந்த கழகத்தில் உள்ள நூலகத்தை தொடங்கியவரும் சிவராமகிருஷ்ணன் தான்.
தற்போது தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் 97வது திருக்குறள் விழா ஏற்பாட்டுகளைக்கூட முழு முனைப்புடன் செய்து வந்தார். 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் சிவராமகிருஷ்ணன்.