spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நூலரங்கம்நூல் அறிமுகம்: 108 ஞான முத்துக்கள்

நூல் அறிமுகம்: 108 ஞான முத்துக்கள்

- Advertisement -
book review 108 pearls

பள்ளிப் பருவத்தில் நீதி நெறி வகுப்புகள் நடக்கும். தமிழில் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நாலடியார் என மனனம் செய்வதற்கென்றே இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள், இப்போது பாடப் புத்தகத்தில் கொடுத்து படிக்கச் செய்கிறார்களே என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டதுண்டு. ஆனால், அந்த இளம் வயதில் மனம் ஒன்றி மனனம் செய்த நீதிநெறிக் கருத்துகள் பல விதங்களில் வாழ்க்கை வழிகாட்டிகளாக அமைந்திருந்ததை பின்னாளில் உணர முடிந்தது.

நம் பாரத தேசத்தில், ரிஷிகளும் மகான்களும் சமுதாயத்துக்குத் தேவையானவற்றை, மனிதனை நல்வழிப் படுத்தி, மனிதனாக மனிதத் தன்மையுடன் வாழச் செய்ய இப்படி பல நீதி நெறிக் கருத்துகளைத் தந்திருக்கிறார்கள்.

வெறுமனே நீதி என்று போதித்தால் அது வெகுஜனங்களிடம் சென்று சேராது என்ற எண்ணத்தில் கதைகளின் வடிவில் விளக்கவும் செய்தார்கள். பஞ்ச தந்திரக் கதைகள் தோன்றியதும் இதன் பின்னணியில்தான்!
நம் பண்டைய பாரத தேசத்தின் இரு பெரும் மொழிகளான தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலக்கியங்கள் போட்டி போட்டு வளர்ந்தன.

இதிஹாச புராணங்களும் வேத உபநிடதங்களும் ஸ்ருதி ஸ்மிருதிகளும் மக்களை நல்வழிப் படுத்தவே எழுந்தன. அத்தகைய அம்சத்தில், இவற்றினூடாக எழுந்தவைதான் சுபாஷிதங்கள். தமிழில் சொல்லப் போனால், பொன்மொழிகள்.

இவை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் தேவையான பொன் போன்றவையே!

சுலோகங்களின் வடிவில் அமைந்திருக்கும் இந்த சுபாஷிதங்கள், சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு வழிகாட்டவே எழுந்தன என்றாலும், அவை உடனே நம் மூளைக்குள் ஏறி, நம்மால் புரிந்து கொள்ளப்படும் நிலையில் இருப்பதில்லை.

எனவே இவற்றை ஆசார்ய ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். இத்தகைய பணியைத் தாம் ஏற்று, திறம்படச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பி.எஸ். சர்மா அவர்கள்.

சம்ஸ்கிருதத்தில் அமைந்த சுபாஷித சுலோகம், அதற்கான நேரடி விளக்கம், பின் அந்த விளக்கத்துக்குத் தோதான அன்றாட அனுபவங்களில் இருந்து எடுத்தாளும் குறிப்புகள், சம்பவங்கள், கதைகள் என பலவாறாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் இந்நூலாசிரியர்.

சாணக்கியரும் சந்திரகுப்தரும் போலே, ராமதாஸரும் சத்ரபதி சிவாஜியும் போலே என குரு சிஷ்ய உறவு முறைகளில் கற்றதும் கற்பித்ததுமான சம்பவங்களை சில சுபாஷிதங்களுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார்.

ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம், அவசியம் நம் தமிழ் மக்களால் படிக்கப் பட வேண்டிய ஒன்று. அவற்றில் இருந்து சிலவற்றை எடுத்துக் காட்டியுள்ளார். தெலுங்கு மொழியில் மூல நூலை எழுதியுள்ளதால், சில சம்பவங்கள், எடுத்துக் காட்டுகள், ஆந்திரப் பகுதியை மையமாக வைத்து உள்ளன.

எனினும் பொதுவாக நாம் கேள்விப் பட்டிருக்கும் கதைகள், சம்பவங்கள் இங்கே பெருமளவில் விளக்கங்களுக்காகக் கொடுக்கப் பட்டிருப்பதால், இதைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்கு அவரவர் தம் மண் சார்ந்த உணர்வு ஏற்பட்டு நூலைப் படிப்பதற்கான ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

முக்கியமாக இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவர் நூலை மொழிபெயர்த்த திருமதி ராஜி ரகுநாதன். ஆங்கில வழியாக மொழி பெயர்க்காமல் மற்றொரு பாரதீய மொழியான தெலுங்கில் இருந்து தமிழுக்கு வெகு சரளமாக, எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நூலைப் படிக்கும் போது, நீதிக் கருத்துகள் தான் நம் மனத்தில் தைக்கிறதே தவிர, தெலுங்கு என்றோ, ஆங்கிலம் என்றோ மொழி வேறுபாட்டின் சாயல் கூட சிறிதளவும் படிவதில்லை. அதுவே இந்த மொழிபெயர்ப்பாளரின் வெற்றி என்று சொல்ல முடியும்.

சுபாஷிதங்கள் நம் மனத்தைக் கொள்ளை கொண்டவை என்பதால், இந்த மூல நூலில் இருந்து ஒவ்வொன்றாக தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன் என்று திருமதி ராஜி ரகுநாதன் சொன்னபோது, பெரும் ஆர்வம் எனக்குத் துளிர்விட்டது.

நம் தமிழ் வாசகர்கள் இவற்றை அவசியம் படிக்க வேண்டுமே என்ற ஆவலில், நம் தினசரி டாட் காம் இணையதளத்தில் நாளொன்றாக தினமும் வெளியிட்டு, சமூகத் தளங்களின் வழியே பகிர்ந்து கொண்டோம். இவை தமிழ் வாசகர்கள் பலரையும் விருப்பத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தன.

இப்போது இந்த 108 சுபாஷிதங்களும் தமிழ் வாசகர்களுக்கு உகந்த வகையில், 108 ஞான முத்துக்களாக புத்தக வடிவில் வந்துள்ளதால், ஆசிரியர் உலகும் மாணவர் உலகும் இந்த நூலை வாங்கிப் படித்து, தாங்கள் பேசும் இடங்களில் இந்த சுபாஷிதங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, இந்த நூலுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

செங்கோட்டை ஸ்ரீராம்
ஆசிரியர், தினசரி இணையதளம்


108 Gnana Muthukkal (108 Pearls of Wisdom)

108 Inspiring Sanskrit Subhashithams with Tamil & English
Commentaries – Compilation & Telugu Commentary : B. S. Sarma

Tamil Translation : Raji Ragunathan

Published by : Akshagna Publications
BNIM, 12-11-1364, Warasiguda, Secunderabad -500 061

Design : SSS Media, Chennai-603 203

For Copies :92461 01884


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,133FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,905FollowersFollow
17,200SubscribersSubscribe