அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் வாஞ்சிநாதன் நினைவு நாளில், செங்கோட்டையில் உள்ள வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான நிகழ்வாக வராலாற்றில் பதிவாகியுள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தன் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரன் வாஞ்சிநாதனின் பிறந்த ஊரான செங்கோட்டையில், வாஞ்சிநாதனது தியாகத்தைப் போற்றும் வகையில் வெண்கலச் சிலையும் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
வஞ்சி உயிர்த்தியாகம் செய்த நாளான ஜூன் 17ம் தேதி இன்று செங்கோட்டை பேருந்து நிலையம் முன்னுள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் தனிநபர்களும் அரசியல் கட்சிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் இன்று காலை வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதே நேரம் பேருந்து நிலையம் முன்னுள்ள வாஞ்சி வெண்கலச் சிலைக்கு, செங்கோட்டை பிராமண சமூகத்தினர், வாஞ்சி உயிர்த் தியாகம் செய்த காலை 10.41க்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிராமண சங்கத்தினர், தென்காசி, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக., பாஜக., கட்சி நிர்வாகிகள் என பலரும் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் இருந்து அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் தொண்டரணி மாநில செயலாளர் முத்துராமன், மாநில செயலாளர் சுரேஷ் சிவம், மாநில துணைத் தலைவர் முத்து சிவம், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கணபதி, தென்காசி மாவட்டத்தின் சார்பில் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாஞ்சிநாத ஐயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.