நாளை வணிகர் சங்க முழு அடைப்புக்கு எத்தனை கட்சிகள் ஆதரவளித்துள்ளன என்று கூறியுள்ள தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணை்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழகம் முழுவதும் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பி.ஆர்.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோசடி மோடி அரசை கண்டித்தும், உடன் அமைத்திட வலியுறுத்தி நாளை (03.04.2018) வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்தார்.அதனை பின்பற்றி காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் சாலை ,ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமாகா , மஜக , சமக,SDPI, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
திருச்சியில் விமானமறியல் போராட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் விமானம், மத்திய அரசு அனுவலகங்கள் முன் மறியல் , முற்றுகை போராட்டங்கள் நடைபெற உள்ளது.
ரயில்கள் தமிழகம் முழுவதும் மறியல் செய்து தடுத்து நிறுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து அமைதி வழியில் போராட்டம் நடைபெற உதவிட வேண்டும்.
கார், மினி வேன், ஆட்டோ, லாரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் வாகனங்கள் இயக்குவதை நிறுத்தி வைத்து ஆதரவளித் திட வேண்டும். தனியார், அரசு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட வேண்டும். ஆம்புலன்ஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு தடையில்லை.
மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என 1 கோடிக்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பங்கேற்க உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை முடக்கும் மோடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து விவாதத்தில் தலைமை நீதிபதியின் கருத்து சந்தேகமளிப்பதாக உள்ளது. ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைகளின் மத்திய அரசின் தலையீடுகள் உள்ளதாக நீதிபதிகளே போர் கொடி தூக்கிய நிலையில் இன்று தலைமை நீதிபதி கருத்து அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
வரும் 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் வலிமையான ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்திரவிடுவார்கள். என வலியுறுத்துகிறேன் என்றார்.
இவ்வாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணை்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.