விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தை புறக்கணிக்கும்
வந்தே பாரத் ரயில் குறித்த அறிவிப்பால், விருதுநகர் மாவட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூடுதல் நெரிசலைக் குறைக்க வந்தேபாரத் சிறப்பு ரயில்கள் (வாரத்தில் 4 நாட்கள்) சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு, விருதுநகர் நிறுத்தம் நீக்கப்பட்டு கோவில்பட்டி சேர்க்கப்பட்டது. அதுபோல், மறு மார்க்கத்தில், நாகர்கோயில் – சென்னை எழும்பூர் இடையே இயங்க உள்ள வந்தே பாரத் அட்டவணையிலும் விருதுநகர் நீக்கப்பட்டது. கோவில்பட்டியைச் சேர்க்கவும் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இது விருதுநகர் மாவட்ட பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் எண் 06067. மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 06068 இயக்கப்படும் என கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயிலானது ஜூலை 11 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும்; எழும்பூரில் அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:50க்கு நாகர்கோவிலை சென்றடையும்!
மறுமார்க்கமாக மதியம் 2.20 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த ரயிலானது சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்குச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது விருதுநகர் சந்திப்பில் நின்று செல்லாமல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, திருத்தங்கல், சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, கமுதி, சாயல்குடி, டி.கல்லுப்பட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் வந்தே பாரத் சிறப்பு ரயிலை (06067, 06068) இயக்கியபோது, அந்த ரயிலானது, சென்னையிலிருந்து விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு காலை 11.27க்கு வந்து 11.28க்கு புறப்படும் எனவும், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு விருதுநகருக்கு மாலை 5.20க்கு வந்து 5.22க்கு புறப்படும் எனவும் கால அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி சென்று வந்தது.
வர்த்தக நகரான சிவகாசி மற்றும், பஞ்சாலை அதிகமுள்ள ராஜபாளையம், ஆன்மீக நகரான திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த ரயில் பயணிகள் அதிக அளவில் வந்தே பாரத் ரயிலில் சென்று வந்தனர். மதியம் 12 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மதுரைக்குச் செல்லும் ரயிலில் வந்து வந்தேபாரத் ரயிலை இணைப்பு ரயிலாக அவர்கள் பயன்படுத்தினர்.
ஏற்கெனவே, திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 6 மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் ரயில் 7.11க்கு விருதுநகர் வந்து 7.13க்கு கிளம்புகிறது. அப்போது, பயணிகளுக்கான உணவுகள் அனைத்தும் ரயிலில் ஏற்றப்படுகிறது. மறு மார்க்கமாக இரவு 9 மணிக்கு விருதுநகரில் நின்று செல்கிறது.
ஆனால், தற்போது விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தைப் புறக்கணித்து விட்டு கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதை அடுத்து, ஏற்கெனவே இருந்தது போல, வந்தே பாரத் சிறப்பு ரயிலை விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்திட வேண்டும். மேலும் புதிதாக இயக்கப்படும் அனைத்து வந்தேபாரத் ரயில்களும் விருதுநகரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே அமைச்சகமும் மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், நெல்லை சென்னை வந்தேபாரத் விருதுநகரில் நின்று செல்லும் நிலையில், கோவில்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டி நிறுத்தம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும், கோவில்பட்டி அல்லது விருதுநகர் என இரண்டில் ஒன்றுக்கு தான் நிறுத்தம் கொடுக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.