செங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செங்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக தணிக்கை என்ற பெயரில் சத்துணவு ஊழியர்களை அரசு அலுவலர் அல்லாத நபர்களை வைத்து தணிக்கை செய்வதை கைவிட வேண்டும், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூவரும் இல்லாத மையங்களுக்கு பணியாட்களை நியமிக்காமல் சத்துணவு ஊழியர்களுக்கு பணிச்சுமையை திணிப்பதை கண்டித்தும், காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் வேலுச்சாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூர்ஜகான் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பணி புரியும் சத்துணவு ஊழியர்கள் சுமார் 70 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.முடிவில் செயற்குழு உறுப்பினர் புஷ்பவல்லி நன்றி கூறினார்.