சென்னை விமான நிலைய சுங்கப் பிரிவில் முறைகேடுகள்!: சிபிஐ 7 மணி நேரம் சோதனை

சென்னை:

சென்னை விமான நிலைய சுங்கத் துறை பிரிவில் முறைகேட்டுப் புகார்கள் வந்ததை அடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்படும் தங்கத்தில், குறைந்த அளவு மட்டுமே பறிமுதல் செய்யப்படுவதாகவும், சுங்க தீர்வை குறைவாக போடப்படுவதாகவும் சரக்ககப் பிரிவிலும், சுங்கத் தீர்வை போடுவதிலும் முறைகேடுகள் நடப்பதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை சி.பி.ஐ. சூப்பிரண்டு ரூபா தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் உள்ள சுங்க இலாகா பிரிவுக்குச் சென்றனர். இன்னொரு பிரிவு விமான நிலைய சரக்ககப் பிரிவுக்கு சென்றது. சுங்க இலாகா பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு, சூப்பிரண்டு, ஊழியர்கள் என அனைவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர்.

பின்னர் அங்கே போடப்படும் சுங்கத் தீர்வை ஆவணங்கள், முறையாக சுங்கத் தீர்வை வசூலிக்கப்பட்டதா?, அதிகாரிகளிடம் அப்போது இருந்த பணம் முறையாக அவர்கள் வைத்திருந்ததுதானா என ஆய்வுகளை மேற்கொண்டனர். விமான நிலையத்தில் அதுவரை பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு எவ்வளவு? அதற்கான கணக்கு என்ன என்பதையும் கேட்டறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவற்றை சரி பார்த்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய காலை 8 மணி வரை நடந்தது. இதில் சி.பி.ஐ. அதிகாரிகள் சில ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆவணங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த சோதனைக்குப் பின்னர் யாரும் கைது செய்யப்படவுமில்லை.

மழை வெள்ளத்துக்கு பின்னர் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கவில்லை என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் சென்னைக்கு தங்கம் கடத்திவரப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றதாம்.

விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சோதனை செய்வது வழக்கம். இவர்களில் ஒரு சில அதிகாரிகளுக்கு, கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதை கண்காணிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் நள்ளிரவு முதல் காலை வரை சோதனை செய்துள்ளனர். பன்னாட்டு முனையங்களில் துபாய், பக்ரைன், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் வரும் இரவு நேரத்தில் சோதனை நடத்தினால், அப்போது கொண்டு வரப்படும் பொருட்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் எப்படி சுங்க தீர்வை போடுகின்றனர் என்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்தனராம்.

இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் செல்போன்களை அணைத்து வைக்கப்பட்டது, தரைவழி இணைப்பு போன்கள் அனைத்தும் விமான நிலைய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. விமான நிலைய சுங்க இலாகா பிரிவில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.