
— ஆர். வி. ஆர்
இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் ஆகிய பலரும் மோடிக்கு அளித்த அங்கீகாரமும் மரியாதையும் மிகப் பெரியவை. டிவி அனைத்தையும் காட்டியது.
அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளின் பல தலைவர்களும் பிரதமர் மோடியைப் போற்றுகிறார்கள், அவரைச் சந்திக்க ஆர்வம் காட்டுகிறார்கள. தயங்காமல் அவரைப் புகழ்கிறார்கள், அதில் மகிழவும் செய்கிறார்கள். இது ஏன் நடக்கிறது?
நீங்கள் செயல்படும் துறையில் ஒரு ஜாம்பவான் வல்லுநர் இருந்தால் அவர் மீது உங்களுக்கு இயற்கையான மதிப்பு ஏற்படும். நீங்கள் ஆசைப்பட்டு ஆனால் எட்ட முடியாத உயரத்தை அவர் அடைந்தார் என்பதால் அந்த மனிதரிடம் காட்டும் பண்பான பணிவின் வெளிப்பாடுதான், நீங்கள் அவர் மீது வைக்கும் உயர் மதிப்பு. நாடுகள் கடந்து ஐன்ஸ்டீனிடம், சச்சின் டெண்டுல்கரிடம், அவர்கள் துறை மனிதர்கள் வைத்திருக்கும் மதிப்பு இதற்கு உதாரணம். அந்த மாதிரி மோடி உலக அரசியல் தலைவர்களின் போற்றுதலைப் பெற்றவர்.
மற்ற உலக அரசியல் தலைவர்கள் பலரும் செய்ய முடியாத எதை மோடி சாதித்தார்? முதலில் எளிதில் தெரிவது, ஒரு ஜனநாயக நாட்டில், அதுவும் பல மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில், பல தரப்பட்ட மக்களின் அமோக ஆதரவையும் அபிமானத்தையும் பெற்றவர் மோடி. அது இரண்டு தொடர் தேர்தல்களிலும் வெளிப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆங்கிலம் அனைவராலும் அறியப்பட்ட மொழி. ஆங்கிலம் பேசும் ஒரு தலைவர் அந்த நாடுகளில் மோடி அளவுக்குத் தமது மக்களின் அபிமானத்தைச் சமீப காலங்களில் பெறவில்லை. ஓட்டுகள் வாங்கிப் பிரதமர் அல்லது ஜனாதிபதி ஆவதை விடவும் மேலானது மக்களின் அபிமானத்தை மோடி அளவில் ஜெயிப்பது. இது போக, மோடி பற்றி உலகத் தலைவர்கள் பலருக்கும் ஒரு ஏகோபித்த கணிப்பு இருக்க வேண்டும். நாம் அதை இந்த வழியில் ஊகிக்கலாம்.
மோடி கெட்டிக்காரர், கடும் உழைப்பாளி, திறமையானவர். அரசியலில் கெட்டிக்காரர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். 99.99 சதவிகிதம் அந்த குணம், அவர்கள் பிழைப்பதற்கும், அவர்களைக் காப்பதற்கும், அவர்கள் செழிப்பதற்கும் பயனாகிறது. ஆனால் ஒரு கெட்டிக்காரன் இன்னொரு கெட்டிக்காரனை அதற்காக மட்டும் பெரிதாக மதிப்பதில்லை.
அரசியல்வாதிகளின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதமாகவது கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். நன்கு உழைத்துத் தன்னை, தன் சுய நலத்தை, அவர்கள் பெரிதாக வளர்ப்பார்கள். இதிலும் போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்வார்கள், அவ்வளவுதான். திறமையான அரசியல்வாதிகளும் ஆயிரக் கணக்கில் உண்டு. இவர்கள் சற்று எட்ட நின்று ஒருவரை ஒருவர் ரகசியமாக மதிக்கலாம் – வெளியில் சொல்ல மாட்டார்கள்.
இந்த மூன்று குணங்களுக்கும் அப்பால், மோடியிடம் ஒரு அசாதாரண நேர்ப் போக்கும், நாட்டுக்கான அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவை உள்ளமும் தூக்கலாக இருக்கின்றன. அவருடைய பேச்சுத் திறன் மட்டுமே அவரது எல்லாக் குணங்களையும் தெளிவாக முன்நிறுத்துகிறது – இது மிக முக்கியம். இவைதான் அவருக்கான மதிப்பையும் மரியாதையும் உலகத் தலைவர்களிடம் இயற்கையாகக் சுரந்து வெளிப்பட வைக்கின்றன.
மோடி மீதான தங்களின் வியப்பையும் மதிப்பையும் தெரியப் படுத்தினால் அவர் கர்வம் கொள்ள மாட்டார், தங்களைக் கீழ் நோக்கிப் பார்க்க மாட்டார் என்று அவரைப் போற்றும் உலகத் தலைவர்கள் உணர்கிறார்கள். அப்போதும் மோடி பணிவாகவே இருக்கிறவர். மோடியின் இந்த குணாதிசயம் அவர் முக பாவத்திலும் உடல் மொழியிலும் கூட பளிச் என்று தெரிகிறது. அதனால் அந்தத் தலைவர்கள் மோடி மீதான போற்றுதலை இயல்பாகக் காண்பிக்கிறார்கள்.
பிற நாடுகளின் தலைவர்கள் மோடியிடம் இப்படி அசாதாரணமான மேன்மைகளைக் காண்கிறார்கள். ஆனால் உள் நாட்டில் ஏன் எல்லா எதிர்க் கட்சிகளும் மோடியைத் தீவிரமாக, காட்டமாக எதிர்க்கின்றன? உதாரணம்: மோடிக்கு முன்பாக காங்கிரஸின் ராகுல் காந்தி இந்த மாதம் அமெரிக்கா சென்ற போது, “நான் அன்பு பேசுகிறேன். மோடி வெறுப்பைப் பேசுகிறார். என் அன்பு வெல்லும்” என்று அங்கு கூட வழக்கம் போல் குழந்தைத் தனமாகவும் போலியாகவும் பேசினார். பாஜக-வின் மிகப் பெரிய சக்தி பிரதமர் மோடி என்று உணர்ந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், “பாஜக-வை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், இந்தியாவின் எதிர் காலத்திற்கும் கேடாக முடியும்” என்று ஜன்னி கண்டவர் போல் நான்கு நாட்கள் முன்னர் திருவாரூர் நிகழ்ச்சியில் பிதற்றினார்.
மோடியைப் பாராட்டும் உலகத் தலைவர்கள், நம்பகத் தன்மை உடையவர்கள். அவர்கள் மோடியை ஒரு தலைவராக, ஒரு ராஜதந்திரியாக மட்டும் பார்த்துப் பிரமிக்கிறார்கள். அவர்களிடம் அரசியல் நேர்மையும் உண்டு, அந்த குணத்தை மோடியும் தனது உயர் பண்புகளால் வெளிப்பட வைக்கிறார்.
மோடியை எதிர்க்கும் இந்திய எதிர்க் கட்சித் தலைவர்களிடம் நம்பகத் தன்மை இல்லை. தாங்கள் பல வழிகளில் செழிப்பதற்கு மோடி ஒரு தடையாக இருந்து தங்களுக்குச் சொல்ல முடியாத நஷ்டத்தை ஏற்படுத்துகிறவர் மோடி என்று அவர் மீது கோபம் கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் அவரவர்களின் செழிப்பில் குறியாக இருப்பதால், ஒருவர் மீது ஒருவர் போட்டியும் போறாமையும் மிக்கவர்கள். ‘நானே அடுத்த பிரதமராக வரவேண்டும். அதற்கு ஏற்பாடாக, மற்ற எந்த எதிர்க் கட்சித் தலைவரையும் நான் பெரிதாக ஆதரித்து எதிர்க் கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தக் கூடாது’ என்று எச்சரிக்கையாக இருந்து ஒருவரை ஒருவர் காமிரா முன்னால் அணைப்பவர்கள். ஆனாலும், முதலில் பாஜக-வைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த வெற்றிடத்தில் தங்களுக்குள்ள ‘யார் பிரதமர்’ கணக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து மோடியை எதிர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றுசேர்ந்து மோடியை எதிர்க்கும் போது, ‘எங்களுக்குள் அடுத்த பிரதமர் நான்தான் என்பதையும் இப்போதே ஊர்ஜிதம் செய்ய வேண்டும். இல்லை என்றால் மோடியை நீக்கிவிட்டு அடுத்தவன் பிரதமராக வர நானே உதவி செய்ததாக ஆகும்’ என்ற கிலியும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
இந்தக் காரணங்களால் எதிர்க் கட்சித் தலைவர்கள் காலை முன்னே வைக்க முடியாமல், பின்னே வைக்க முடியாமல், சேர்ந்தும் வைக்க முடியாமல், ஒவ்வொருவரும் தங்களின் கால்கள் பின்னி நிற்கிறார்கள். இவர்களின் வில்லத் தனமே ஒருவரை ஒருவர் கட்டிப் போட்டு நாட்டைக் காப்பாற்றட்டுமே? அந்த வினோத வகையில் இவர்களும் உலகத் தலைவர்கள் போல் மோடிக்கு உதவட்டுமே?
Author: R. Veera Raghavan, Advocate, Chennai