வர்தாவில் சி.ஐ.டி.யு. அமைப்பினால் பல ஊழியர்களின் முன்னிலையில் பாராட்டு கிடைத்த போது.

காலச் சக்கரம் மிக வேகமாக சுழன்று விட்டதே!. நான் மஹாராஷ்டிர மாநிலத்திற்கு வந்து பத்தொன்பது வருடங்கள் ஓடி விட்டன.

தமிழ்நாட்டில் இருந்து திருமணமாகி வர்தா ( மஹாராஷ்டிரா) வந்தவுடன், புதிய சூழ்நிலை, புதிய மொழி, புதிய கலாச்சாரம் என எல்லாமே புதுமையாக இருந்தது. தெரிந்த கொஞ்சம் ஹிந்தியில் உரையாடினாலும், என் தென்னிந்திய உச்சரிப்பைக் கேட்டு பல பேர் சிரித்து இருப்பர்.

நான்கு சுவருக்குள்ளேயே அடைக்கலமாக்கிக் கொண்ட என்னை என் வீட்டருகில் இருந்த ஒரு தோழி ஒரு மராட்டி நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.

ஒரு படிக்காதவர் ஒரு பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டதைப் போன்ற ஒரு உணர்வு வந்தது. ஆனாலும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை காணும் வாய்ப்புக் கிடைத்தது.

என் இரண்டு மகன்கள் பிறந்த பிறகு அவர்களுடன் அக்கம்- பக்க வீடுகளுக்கு சென்றதால் கொஞ்சம் உள்ளூர் மொழி பழக்கமாயிற்று. பல தோழிகளின், தோழர்களின் அறிமுகம் கிடைத்தது.

மராட்டியப் பெண்களின் திறமைகளை அறிந்து, பார்த்து, ஊக்கமடைந்தேன். என்னையும் அவர்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொள்ள கடவுளின் அருளால் எனக்கு கிடைக்கப் பெற்ற எழுத்துத் திறமையை உபயோகப் படுத்தத் தொடங்கினேன்.

மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படும் ‘மஹாலெஷ்மி’ பண்டிகையையும், விதர்பா பகுதியில் கொண்டாடப்படும் ‘தான்ஹா போளா’ ( சிறியவர்கள் கொண்டாடும் மாட்டுப்பொங்கல்) பற்றியும் தமிழ் மாதாந்திர இதழிலும், தமிழ்நாட்டில் கொண்டாடும் நவராத்திரி பற்றியும், மார்கழி ஆண்டாள் உற்சவத்தையும், என் குடும்பத்தினர் உதவியுடன் மராட்டி நாளிதழிலும் எழுதி என் தன்னம்பிக்கையை திரும்பப் பெற்றேன்.

கொஞ்சம் கொஞ்சமாக மராட்டியும் கற்றுக் கொண்டேன்.  பின்னர், மத்திய இந்தியாவில் சிறந்ததாக கருதப்படும் ஆங்கில நாளிதழில் மொழிபெயர்ப்பாளராக (ஹிந்தி, மராட்டியில் வரும் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் வேலை) சேர்ந்தேன்.

என் குழந்தைகள், என் குடும்பத்தினர், என் தோழிகள், ஆண் நண்பர்கள், அலுவலகத்தின் மூத்த பத்திரிக்கையாளர்கள், இளைய பத்திரிக்கையாளர்கள் என பலரின் உதவியும், ஒத்துழைப்பும் என் பணிக்கு ஆணிவேராக அமைந்தது. மனநிறைவடைந்தது.

வர்தாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மூத்த பத்திரிக்கையாளர்களுடன் சேர்த்து எனக்கும் பாராட்டு விழா நடத்தினர்.

பிப்ரவரி 27 – மராட்டி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மராட்டிய நண்பர்களின், தோழிகளின் ஆதரவை நினைக்கும் போது  கனியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்”, என்ற வாசகம் நினைவில் வருகிறது.

இத்தருணத்தில் எனக்கு ஊக்கமளித்த மராட்டியர்களுக்காக இது ஒரு சின்ன அர்ப்பணிப்பு.

– ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...