spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நீலப்புரவி வீரன்- பாகம் 4

நீலப்புரவி வீரன்- பாகம் 4

நீலப்புரவி வீரன்- பாகம் 4

நீர்நிலையை அசுத்தப்படுத்துபவன், அதை அழிக்கிறான்  

மீனாளுக்கு திருமணம் முடிந்து ஒரு திங்களாகி விட்டிருந்தது. தானியில் அவர்களுக்கு என்று தனியாக சிறிய வீட்டை ஒதுக்கியிருந்தார்கள். அவளுக்கு எல்லாம் புதிதாக இருந்தது. மீனாள் அந்த வருடம் வந்த ஹோலியையும், தீபாவளியையும் ரசித்து மகிழ்ந்தாள். அங்கிருந்த வெள்ளந்தி மக்களின் அன்பும், ஆதரவும் அவளுக்கு கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக விக்கிரமனின் மொழி பேசக்கற்றுக் கொண்டாள். ராஜபுத்திர பழக்கவழக்கங்கள் எல்லாம் மகாராணா பிரதாப்சிங்கின் அன்புக்கினியவளும், மேவாரின் மாதாரசியுமான மகாராணியார் புன்வார் சொல்லிக் கொடுத்தாள். அவளிடம் மிகுந்த அன்புடன் மீனாள் நடந்து கொண்டாள். எலோஜியும், கோகாஜியும்  அவள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துதான் போனார்கள். பத்மநாதபுரத்திலிருந்த இனப்பாகுபாடு இங்கும் இருப்பதைக் கண்டு மீனாள் மனம் வெதும்பினாள். ஒட்டகங்களும், மாட்டுவண்டிகளும் அங்கும் இங்கும் செல்வதை அவள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருப்பாள். விக்கிரமனுக்கு பிடித்த மிளாகாயும், பூண்டும் சேர்ந்த சட்னி செய்யவும், சோக்ரா ரொட்டிகளை  செய்யவும் கற்றுக்கொண்டாள். அதை அவன் விருப்பமுடன் சாப்பிடுவதை அன்பாக பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு பிடிக்காது போனது டோடாதான் . அவளின் உள்ளத்தை அறிந்த விக்கிரமன் அதை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டான். திருமண உறவு அவளின் உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்களைக் கொடுத்தது. எத்தனை வேலைகளிருந்தாலும் வானத்தில் மூன்று நட்சித்திரம் மேலே வரும் பொழுது விக்கிரமன் வந்து விடுவான். அன்றும் வந்தான். வந்தவன் உதயப்பூர் குளத்தில் நன்றாக நீராடி விட்டு வந்தான். வீட்டின் கதவைச் சாத்தியவன், மீனாளை இருக்கிப் பிடித்தான். “மெல்ல வலிக்கப் போகிறது: என்றாள் மீனாள் வெட்கத்துடன். “யாருக்கு?” என்றான். மீனாள் தனது வயிற்றை அவனது கையைப் பிடித்துக் தடவி காண்பித்தாள். “எப்பொழுது?” “இன்றுதான் உறுதியாச்சு” “யார் உறுதி பண்ணியது?” “வைத்தியரின் துணையாள். இருவரும் என்மீது தீராத அன்பு கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்துவிட்டேன்” விக்கிரமனின் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. தனக்கு ஒரு வாரிசா? மீனாளை அப்படியே தூக்கிப் பிடித்தான். “மெல்ல, கீழே விடுங்கள்” அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தவன், அவள் முகத்தருகே தனது முகத்தை கொண்டு செல்ல, மல்லிகை வாசனை அவனை தெய்வலோகத்துக்கு கொண்டு சென்றது.  மெல்ல தங்கரதத்தின் இதழில் தனது இதழைப் பதித்தவன் அனைத்தையும் மறந்தான். அவளருகே படுத்தவன் அவளை அணைத்துக் கொண்டவன், “எப்பொழுது முத்து கிடைக்கும்?” என்று கிசுகிசுத்தான். “இன்னும் எட்டு மாதத்தில்” “அதுவரை இதற்கு?” “கேட்டேன். தடையில்லையாம்” என்ற அவளை மீண்டும் இருக்கி அணைத்தவனிடம் மீனாள் கரைந்து போனாள். எல்லாம் முடிந்த பிறகு, அவளை எங்காவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது விக்கிரமனுக்கு. மீனாளை அழைத்துக் கொண்டு ‘உதயசாகர்’ நீர்தேக்கத்துக்கு வந்தான். நீர்தேக்கத்தைப் பார்த்து மிகவும் மகிழ்வு கொண்டாள் மீனாள். ஆண்டவனின் பிரசாதமான ஒரு சொட்டு மழைத்துளி கூட வீணாக்காமல் நீர்நிலையில் சேர்த்து வருடம் முழுவதும் பயன்படுத்தும் அமைப்புகளைப் அவளிடம் காண்பித்தான். அந்த சமயத்தில், நீர்தேக்கத்தில் ஒருவன் கரியநிறத்தில் ஏதோ ஊற்றுவதைக் கண்டு விக்கிரமன் அவனிடம் மிகவும் கோபம் கொண்டான். அவனை மேவார் காவலர்கள் இழுத்துச் செல்லும் வரை அங்கே நின்றவன், அவர்கள் போனபிறகுதான் மீனாளை கவனித்தான். “ஏன் இத்தனை கோபம்?” என்று அவனிடம் மீனாள் கேட்டாள். “நீர்நிலையை அசுத்தப்படுத்துபவன், அதை அழிக்கிறான்” என்ற விக்கிரமன், “இந்த நீர்நிலை அமைய மகாராஜா உதயசிங் எத்தனை கடினப்பட்டார் என்று எனக்குத் தெரியும், அதனால் தான் கோபம் வந்தது” என்றான். “ஏதோ அசுத்த நீரைக் கலந்ததால், ஏரி அழிந்து விடுமா என்ன?” அவளைக் கவனித்த விக்கிரமன், “அழிந்துவிடும் தான் மீனா” என்றான் “எப்படிச் சொல்லுங்களேன்? “அவன் ஊற்றிய அசுத்த நீரினால், நீர்நிலையில் உள்ள மீன்கள் இறக்கும், மீன்கள் மட்டுமல்லாமல் ஏரியைச் சுற்றி இருக்கும் மரங்கள் எல்லாம் அசுத்த நீர்பட்டு அழியும். மரங்கள் அழிந்தால் மழை ஏது மீனா? மழை இல்லாவிட்டால் இந்த நீர்நிலைதான் ஏது? அதைச்சுற்றி இருக்கும் மனிதர்களும் கூட இறந்துதான் போவார்கள். அதனால்தான் எனக்கு அத்தனை கோபம் வந்தது” அவன் சொன்னதின் ஆழ்ந்த அர்த்தம் மீனாளுக்கு புரிந்தது. அவர்கள் ஏரியைத் தாண்டி மரங்கள் அடர்ந்து இருந்த இடங்களுக்குச் சென்றார்கள். “மீனா, உனக்குத் தெரியுமா இந்த மரங்களுக்காக உயிரைக் கொடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள்” “பெண்களா?” “ஆமாம் மீனா. இந்த மேவாரின் பழங்குடி மக்கள் மரத்தை தெய்வமாக எண்ணுபவர்கள். மரத்துக்காக உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டார்கள். யாரவது மரத்தை வெட்ட வந்தால் தங்கள் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுவார்கள்” மீனாள் அசந்து போனாள். “ஏன் அப்படி?” “ஒரு மரம் அழிவது என்பது ஒரு உலகமே அழிவது போல. இந்த மரத்தைப் பாரேன். இதில் எத்தனையோ உயிர்கள் வாழ்கின்றன. இந்த மரம் விழுந்தால் அத்தனையும் இறக்கும். மரத்தை வெட்டுபவன் ஒரு உயிரை அழிக்கவில்லை. கோடிக்கணக்கான உயிரை அழிக்கின்றான். அதனால் தான் இத்தனை கோபம். இது அவர்கள் மனதில் வழிவழியாக வரும் நம்பிக்கை. காடும் நாடும் அழியாமல் இந்த நம்பிக்கைதான் காப்பாற்றுகிறது” என்றான் விக்கிரமன். மரத்தின் அடியில் சிறு சிறு செடிகள் இருந்தன. “இவையெல்லாம் என்ன?” “இவை மூலிகைகள். இதைப் பாரேன்” என்ற விக்கிரமன் ஒரு மருந்துசெடியைக் காண்பித்தான். “இந்த மூலிகையை நல்லபாம்பு கடித்தாலும் கூட, கடிபட்ட இடத்தில் தடவினால் பிழைத்துக் கொள்ளுவான்” என்றான் விக்கிரமன். மீனாள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இராவண யுத்தத்தில் அனுமார் எடுத்து வந்த காந்தவர்ம மலை என்று அழைக்கப்பட்ட சஞ்சீவினி ஞாபகம் வந்தது. அதை விக்கிரமனிடம் சொன்னாள். “அது போன்று மருந்துமலை கிடைத்தால் நலமாக இருக்கும்” என்றான் விக்கிரமன். வெகு தூரத்தில் மழைமேகம் தெரிந்தது. “மழை வரும் போல இருக்கிறது நாம் போகலாம்” என்றாள் மீனாள் “நமக்கு முன்னால் தெரிவது மழை மேகம் மட்டுமல்ல. யுத்தமேகமும் தெரிகிறது” “யுத்தமா? யாருக்கும் யாருக்கும் யுத்தம்? “உனக்கு இங்குள்ள சூழ்நிலை தெரியாது. அதனால் கேட்கிறாய்? “சொல்லுங்கள்” “உதயமகாராஜாவுக்கு நான்கு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். மகாராணி ஜவந்தபாய் ஏழு குழந்தைகளையும் அன்புடன் வளர்த்தார். அப்பொழுது அவர்கள் சித்தூரில் இருந்தார்கள். அந்தசமயத்தில் அக்பரின் படை வந்தது. ரத்தம் சிந்திய யுத்தம் மூண்டது. யுத்தத்தில் அக்பர் வென்றார். கோட்டையிலிருந்த பெண்கள் தங்களது மானத்தைக் காக்கத் தீக்குளித்து வீரமரணமடைந்தார்கள். இருபத்தேழாயிரம் பேருக்கு மேல் யுத்தத்தில் மரணமடைந்தார்கள். அதன் பின்புதான் இங்கு வந்தோம். உதயசிங் மகராஜா எத்தனை சொல்லியும் அவரின் செல்ல மகனை ஜக்பாலை ஆட்சியில் அமர்த்தாமல், அவரின் மூத்த மகனனா மகாராணா பிரதாப்சிங்கை ஆட்சியில் அமர்த்தினார்கள் இந்த நாட்டின் உயர்குடிமக்கள். என்று நிறுத்தினான். “சொல்லுங்கள்” என்றாள் மீனாள். “அக்பர் படையினர் செய்த கொடுமையின் வடு மகாராணா பிரதாப்சிங்கின் மனதிலிருந்து போகவில்லை. அதன்பிறகு எத்தனை தூது வந்தும் மகாராணா பிரதாப்சிங் அக்பருடன் சமாதானமாகப் போகவில்லை. மகாராணா பிரதாப்சிங்கின் சகோதரர்கள் சக்திசிங்கும், சாகர்சிங்கும் கூட அக்பருக்குப் பணிந்து போனார்கள். ராஜபுத்திர பெண்களை முஸ்லீம்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதையும் மகாராணா பிரதாப்சிங் எதிர்த்து வந்தார்” மீனாள் கவனமாகக் கேட்டு வந்தாள். “இதெல்லாம் சேர்ந்து அக்பரின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. மீண்டும் ஒரு யுத்தம் வர வாய்ப்பு இருக்கிறது” “எப்பொழுது வரும்?” எங்கு?” “உதயபூரில் இருக்காது. ஹல்டிகாடியில் இருக்கலாம்” “அது எங்கே இருக்கிறது?” “அருகில்தான்” “நீங்கள் யுத்தத்துக்குப் போவீர்களா?” “யுத்தம் என்று வந்தால் ராஜபுத்திரர்கள் போய்தான் ஆகவேண்டும். நான் திரும்பி வராவிட்டால் நீ உடன்கட்டை ஏறிவிடு” என்றான் விக்கிரமன். “நீங்கள் போனபிறகு இந்த உயிர் இருந்து என்ன செய்யப்போகிறது” என்றாள் மீனாள்.     வெகுதொலைவில் வெள்ளி நிலா மேலே மேலே வந்து கொண்டிருந்தது. மீனாளின் மனது கனத்து போய் கண்களில் இருந்து கண்ணீர் லேசாக வந்தது. நிலாவின் வெளிச்சத்தில் பார்த்த விக்கிரமன் மனது துடித்துப் போனது. புரவி வரும் சப்தம் கேட்டது. “மீனா, மகாராஜா வருகிறார்” என்றான் விக்கிரமன் எழுந்தபடி. மீனாளும் எழுந்தாள். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” “சேடக் சப்தம் எனக்குத் தெரியாதா? “சேடக்கா?” “ஆமாம் மகாராஜாவின் புரவி” “அதில் என்ன விசேசம்?” “பார் தெரியும்” என்றான் விக்கிரமன். சற்று நேரத்தில் சேடக் வந்தது. அதில் மகாராஜா மகாராணா பிரதாப்சிங் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் இடையில் அழகான வாள் ஒன்றை செருகியிருந்தார். அந்தவாள் மிகவும் கூர்மையாக இருந்தது. அது நிலவு ஒளியில் பிரகாசித்தது. புரவியின் சேனத்தில் நிலவின் இன்னுமொரு வாளின்பிடியும் பிரகாசித்தது. எதற்கு இரண்டு வாட்கள் என்று நினைத்தவள், மகாராஜாவையும் அவர் வந்த புரவியையும் பார்த்து அசந்து போனாள் மீனாள். குள்ளமான கழுத்துடன் இருந்த அந்தப் புரவிக்குச் செறிந்த முடிகொண்ட வால் இருந்ததது. குறுகலான முதுகும், அகன்ற நெற்றியும், திரண்ட தோள்களைக் கொண்ட அந்த வெண்குதிரை தனது பெரிய விழிகளைக் கொண்டு மீனாளைப் பார்த்தது. அதைப் பார்த்த மீனாள் பரவசம் அடைந்தாள். விக்கிரமன் மகாராஜாவை வணங்கினான். மீனாளும் வணங்க, இரவில் அரண்மனைக்கு வரச் சொல்லி விட்டுச் சென்றார் மகாராஜா. அது போகும் வேகத்தைப் பார்த்த மீனாள், “இந்தப் புரவிக்கு பறக்கும் பாதங்களா” என்றாள் மெல்ல. “அது மட்டுமில்லை மீனா. நுண்ணறிவு படைத்தது, கட்டுப்பாடும் துணிவும் கொண்ட புரவி” “எதற்கு இரண்டு வாட்கள் வைத்திருக்கிறார்? “மகாராஜா இரண்டு வாட்கள் எப்பொழுதும் வைத்திருப்பார். இரண்டும் ஒன்று போல இருக்கும். எடையும் நாற்பது கிலோ அளவில் இருக்கும். சண்டை ஏற்படும் பொழுது தனது எதிரிக்கு ஒரு வாளை கொடுத்து, சற்று நேரமும் கொடுத்துதான் போரிடுவார். இரவில் அரண்மனைக்கு செல்லவேண்டும். வா, நாமும் போவோம். நமக்கு மீண்டும் ஒருமுறை முக்கிய வேலை இருக்கிறதல்லவா? “மறுபடியுமா? மீனாள் சிரித்தாள். அங்கிருந்து விலகிய அவர்கள் தங்கள் இல்லத்தை அடைந்தார்கள்.

தொடரும்

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe