புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியலைக் கடந்து உதவ வேண்டும்: கேரள முதல்வருக்கு கமல் கடிதம்

தமிழகத்தில் கஜாபுயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு அரசியலைக் கடந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

மதிப்புக்குரிய கேரள முதல்வருக்கு …
அண்மையில் வீசிய கஜா புயல்.தமிழக டெல்டா மாவட்டங்களில், கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதிமய்யம் கட்சி, கேரள அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்.

கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்களாகும்.

இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கவும் இப்பணியினை இன்றே தொடங்கிட வேண்உம்.

பயிர்கள் சேதாரமடைந்து மரங்கள் வேருடன் சாய்ந்து படகுகளை இழந்து, மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, உன்னதமான மானுடக் கருணையை உணர்ந்திட வேண்டிய அவசியாமான தருணம் இது. மனிதாபிமானம் மனிதத்தின் அடிப்படை உணர்வு. அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப் பாலம். அதுதான் இன்று இப்பொழுது இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிக தேவையான ஒன்று…

உங்கள் நான்
கமல்ஹாசன் என்று கையெழுத்திட்டு, கடிதத்தை அனுப்பியுள்ளார்.