

“உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலரும் ஓடப் போகிறதா?” என சேலம் ஆத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் விமர்சனம் செய்து பேசினார்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் சொத்து வரி, மின்சாரக் கட்டண உயர்வு, பால் விலை ஏற்றம் உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சேலம் ஆத்தூரில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இ.பி.எஸ், “தமிழகத்தில் பல மாவட்டங்களில் தி.மு.க வெற்றிக்கொடி நாட்டினாலும், சேலம் மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.க-வின் கோட்டைதான். இந்த அ.தி.மு.க-வின் கோட்டையில் நுழைய தி.மு.க-வினர் எப்படி எல்லாம் வேலை பார்க்கிறார்கள் தெரியுமா… ஆனால், எப்படிப்பட்ட வேலை பார்த்தாலும் சரி… இப்படி மழையினை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் இந்தக் கூட்டம் உள்ளவரை, தி.மு.க சேலத்துக்குள் உள்ளேவர முடியாது. தி.மு.க எனும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்காக எடுத்த சபதம் இது. மக்களின் ஒட்டுமொத்த குரலாக இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடத்துகிறார். நாட்டுக்கு நல்லதை செய்த ஒருவருக்கு முடிசூட்டு விழா செய்கிறார்களா என்ன? உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலரும் ஓட போகிறதா? தமிழகத்தில் ஏற்கெனவே தி.மு.க ஆட்சியில் அனைத்து துறைகளிலும், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இவர் வந்தால் மட்டும் நல்லது செய்வார் என்று நினைக்கிறீர்களா? நடைபெறுகிற ஊழல்களுக்கு இவரே தலைவராக இருந்து செயல்படுவார். தி.மு.க ஆட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று கூறிவிட்டு, தற்போது ஸ்டாலின் தன்னுடைய மகனை அமைச்சராக்குவது மட்டும் குடும்ப அரசியல் இல்லையா?
தி.மு.க ஆட்சியில்தான் தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் இருந்து வருகிறார்கள். அது தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான்… என்ன வேடிக்கையாக இருந்து வருகிறது.
ஒரு முதலமைச்சர் இருந்தாலே தமிழ்நாடு தாக்குப் பிடிக்க முடியாது, நான்கு பேர் இருந்தால் தாக்குப் பிடிக்க முடியுமா?குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும், முடிவு கட்டுவோம். தி.மு.க எனும் கார்ப்பரேட் கம்பெனியை முழுவதுமாக எதிர்ப்போம். பல்வேறு துறைகள் மூலம் ஊழல் செய்து, சம்பாதிக்கும் பணத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனும் சினிமா வெளியிட்டு நிறுவனத்தின் மூலமாக கறுப்புப் பணத்தை, ஒயிட் மணியாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்துக்கு திரைப்படத்தை கொடுக்கவிட்டால் அந்தப் படத்தை வெளியிடவிடுவதில்லை.
இதனை நாங்கள் விமர்சனம் செய்தால் அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் முதலில் ஒற்றுமையாக இருக்கட்டும் அதற்குப் பிறகு அவர்கள் பேச தகுதியானவர்கள் என்று தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒன்றாகத்தான் இருக்கின்றனர். அ.தி.மு.க-வை எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது.
அ.தி.மு.க இயக்கத்தை ஒற்றுமையாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க-வின் பலத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அ.தி.மு.க-வின் தொண்டன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உழைப்பால் வளர்ந்த கட்சி எப்போதும் அ.தி.மு.க கட்சிதான். மக்களைக் காக்க கூடிய கட்சி அ.தி.மு.க கட்சிதான். அ.தி.மு.க உயிரோட்டம் உள்ள கட்சி எவராலும் அசைக்க முடியாது. பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க-வை முடக்கி விடலாம் என்று நினைத்து விடாதீர்கள். எத்தனை வழக்குகள் வந்தாலும் அவற்றை சட்ட விதிகளின்படி எதிர்கொள்வோம். அ.தி.மு.க-வில் தொண்டன்தான், கட்சியை வழிநடத்த முடியும் பொறுப்புக்கு வர முடியும். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொள்ளை, கொலை மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகின்றன.
மோசமான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் சூப்பர் முதலமைச்சராம். வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த சவுக்கடி கொடுக்க வேண்டும். அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும். வீட்டு மக்களை விட்டு விட்டு, நாட்டு மக்களைப் பாருங்கள், நம்பி வாக்களித்த மக்களுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்ய வேண்டாம்” என்றார்.