ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு புது விளக்கம் அளித்த ஹெச்.ராஜா..!

அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் தனது தரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார் என்று, பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.

மதுரை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மாவட்ட வாரியாகச் சென்று நடத்துவது ஆய்வு அல்ல; அரசு திட்ட செயல்பாடுகள் குறித்த அறிதல், புரிதலே. அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் தனது தரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார் என்று, பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, மோடி தலைமையிலான பாஜக., அரசு தீர்க்கவே முடியாமல் கிடந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறது. அதற்கு உதாரணங்களாக, ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கான ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியது; காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைத்தது இவற்றைச் சொல்லலாம்.

கர்நாடக அரசு, அதன் பிரதிநிதிகளை நியமிக்க காலம் தாழ்த்திய நிலையில், மத்திய அரசு அதற்கான உறுப்பினர்களை நியமித்தது. அரசியலுக்காக திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களைக் கேட்டுப் பெற, மாவட்டங்களில் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆளுநர் கேட்டறிகிறார். அவர் நடத்துவது ஆய்வு அல்ல. அறிதல், புரிதல்! அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம் ஸ்டாலின் தனது தரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார். ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவர் போல நடந்து கொள்ளவில்லை… என்று கூறினார் ஹெச்.ராஜா.