ராகுல் கொடுத்த ‘காவல்காரன்’ பட்டம்… மோடிக்கு கைகொடுக்குமா?!

2014இல் சாய்வாலா (டீக்கடைக்காரர்) 2019இல் சௌக்கிதார் (காவல்காரர்)… பாஜக., வெற்றிக்கு காங்கிரஸ் கொடுத்த ஐடியாக்கள் இவை!

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜக விற்கு எடுத்துக்கொடுத்த வெற்றிகரமான கோஷமாக அமைந்தது தான் சாய்வாலா. மோடியின் இளமைக்கால பின்னணியை மையமாகக் கொண்டு காங்கிரசின் மணிசங்கர் ஐயர் உள்ளிட்ட தலைவர்கள் கொடுத்த பட்டப் பெயர் தான் சாய்வாலா மோடி!

தனது தந்தையுடன் டீ கடையில் வேலை பார்த்தார் என்ற தகவலை வெளிப்படுத்தி ஒரு டீக்கடையில் டீ கிளாஸ் கழுவிய… அதுவும் எச்சில் கிளாஸ் கழுவிய நபரா இந்த நாட்டின் பிரதமராக வருவது என்று காங்கிரஸ்காரர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் மோடியை பிரதமர் ஆக்கியது!

அந்த சாய்வாலா என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு மோடி பல்வேறு இடங்களில் மக்களுடன் சாயி குடித்தல், டீக்கடை பேச்சு, டீ குடித்தபடி அரசியல் பேச்சு என்று ’சாய் பே சர்ச்சா’ என்ற புதுவித உத்தியை கையாளத் தொடங்கினார்! அதன் மூலம் மக்களிடம் வெகு இயல்பாக சென்று சேர்ந்தார் மோடி!

அத்தகைய நிலையை தற்போது காங்கிரஸ்காரர்கள் மீண்டும் மோடிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்!

தற்போது 2019 தேர்தல் நடைபெற்று வருகிறது! பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் காங்கிரஸ்காரர் எடுத்துக் கொடுத்த ஐடியாக்கள் மோடிக்கு உதவிகரமாய் அமைந்திருக்கின்றன!

அண்மையில் தற்போதைய 16 ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி நாட்களின் போது பிரதமர் மோடி உரையாற்றினார்! அப்போது அவர் தனது உரைகளில், தான் ஒரு காவல்காரனாக இருந்ததாகக் குறிப்பிட்டார்! நாட்டில் பல்வேறு திருடர்களும் உலவும் சூழலில் தான் சௌக்கிதார்… அதாவது ஒரு காவல்காரனை போல் வேலை பார்த்து வருவதாகவும் தன்னை பிரதம மந்திரி அல்ல பிரதம சேவகன் என்றும் குறிப்பிட்டுக் கொண்டார்.

ஆனால் மோடியின் இந்த வாசகத்தை கையில் எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி வெறும் காவல்காரன் இல்லை காவல்கார திருடன்… காவலாளி திருடன் என்பது போன்று பேசினார். ஆனால் அவரது இந்தப் பேச்சு மகாராஷ்டிரத்தில் காவல்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் ராகுலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். தங்களது தொழிலை கேவலப்படுத்தியதாகவும், மட்டம் தட்டியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்! ‘காவலாளி திருடன்’ என்ற அந்த வாசகம் தங்கள் மனதை புண்படுத்தியதாக அவர்கள் குரல் எழுப்பினர்!

ஆனால் ராகுல் அந்த வாசகத்தை விடுவதாக இல்லை! இந்தச் சூழ்நிலையில் இந்தப் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிஜேபி, அதே வாசகத்தை இந்த முறை தேர்தல் பிரச்சார வாசகமாக கையில் எடுத்துள்ளது!

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன். நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரம் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார் “நானும் காவலாளி தான்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக., தேர்தல் பிரசாரத்துக்காக இந்த வீடியோவை மோடி பதிவிட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக மார்ச் 31 ஆம் தேதி நாட்டு மக்களிடையே மோடி உரையாற்ற உள்ளார்.

இவ்வாறாக, சென்ற முறை டீக்கடைக்காரர் கோஷத்தையும் இந்த முறை காவல்காரர் கோஷத்தையும் காங்கிரசை மோடிக்கு எடுத்துக் கொடுத்து மோடியின் வெற்றிக்கான சூத்திரம் ஆகக் கொடுத்துள்ளது!

இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்ட பிரதமர் மோடி நேற்று காவல்காரன் என்ற இயக்கத்தை தனது ட்விட்டர் பதிவுகளில் தொடங்கினார். நாட்டில் ஊழல் லஞ்சம் திறமையின்மை அதிகார தோரணை இவற்றையெல்லாம் களைந்தெறிந்து நாட்டை புதிய இந்தியா என்ற முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நான் ஒரு காவல்காரனாக இருப்பேன்! இந்தக் காவல்காரன் தனி ஆள் இல்லை! எவரெல்லாம் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கும் புதிய இந்தியாவுக்கும் கை கொடுக்க முன் வருகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவல்காரர்கள்! இந்த இயக்கத்தில் அனைவரும் சேர வாரீர் என்று காவல்காரன் இயக்கத்தை தொடங்கி வைத்தார்!

https://twitter.com/hashtag/MainBhiChowkidar?src=hash

அவரது அழைப்புக்கு மிகப் பெரும் ஆதரவு தென்பட்டது. ட்விட்டர் பதிவுகளில் பலரும் இந்த ஹேஷ்டேக்கை பதிவு செய்து தாங்களும் ஒரு காவல்காரன் என்று தங்களை பதிந்து கொண்டார்கள்!

இந்த இயக்கம் மிகப் பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தனது ட்விட்டர் பதிவுகளில் தனது பெயரை ‘சௌக்கிதார் நரேந்திர மோடி’ மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி. அதாவது காவல்காரர் நரேந்திர மோடி என்று தனது பெயரை திருத்திக் கொண்டார்!

அவரது பாணியில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் காவல்காரன் அமித்ஷா என்று மாற்றிக் கொண்டார்! இதையடுத்து பல்வேறு பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் தங்களது பெயர்களை ட்விட்டரில் காவல்காரர் என்ற முன் பெயருடன் இணைத்து பதிவு செய்து கொண்டனர்!

தற்போது இந்த இயக்கம் பரவலாக மாறி இருக்கிறது! ஆனால் இதை காங்கிரஸ் மேலும் மேலும் கேலி செய்து வருகிறது. காங்கிரஸ் கேலி செய்து எதிர்ப்பு கிளம்ப அதே அளவுக்கு காவல்காரன் என்ற அடைமொழியுடன் கூடிய பெயர்கள் டிவிட்டர் பதிவுகளில் அதிகம் தென்படுகின்றன! எனவே இந்தமுறை பாஜகவின் வெற்றிக்கு காங்கிரசை அமைத்துக் கொடுத்துள்ள ஒரு சூத்திரம் ஆகவே இந்த காவல்காரன் மோடி என்ற வாசகம் அமைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை!

ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியபோது ரபேல் முறைகேடு என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்! அப்போது இவர் காவல்காரன் இல்லை காவல்கார திருடன் என்றார்! அந்தப் பேச்சுதான் காங்கிரசுக்கு இப்பொழுது பூமராங்காக மாறியிருக்கிறது!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...