
ஆமை வேகத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி பஸ் நிலையப் பணிகள் முயல் வேகத்துக்கு மாறியுள்ளது!
மதுரையில், மீனாட்சி அம்மன் கோயில், ரயில்நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது பிரதான பஸ்நிலையமான மீனாட்சி பஸ் நிலையம். நெடுங்காலமாகவே ம்துரையை மற்ற நகரங்களுடன் இணைக்கும் முக்கிய பஸ் நிலையமாக நூறாண்டுகளுக்கு முன்பே இருந்தது.
பின்னாளில் 1971இல் இந்த பஸ்நிலையத்தை பெரியார் நிலையம் என்று பெயர் மாற்றியது அரசு. இதுபின்னர் நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப் படும் நிலையமாக மாறிப் போனது. வெளியூர் பஸ்கள் இயக்கப் படும் நிலையமாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உருவானது. தற்போது அதற்கு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில், அண்மையில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்தது. இதன் கீழ் இந்த மீனாட்சி பேருந்து நிலையமும் தற்போது நவீனப் படுத்தப் பட்டு வருகிறது!
மீனாட்சி பஸ்நிலைய பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது போய் தற்போது முயல் வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் பல்வேறு கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை காளவாசல், ரிசர்வ் லைன், சிவகங்கை சாலையில். பி.சி. பெருங்காய கம்பெனி அருகேயும் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வந்தன. மதுரை மீனாட்சி பஸ் நிலையத்தில் பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து விட்டு, நவீன முறையில் அங்காடிகளுடன் கூடிய பஸ்நிலையம் அமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது.
கொரோனா பரவல் ஊரடங்கு காரணத்தினால் நிறுத்தப்பட்ட பணிகள், மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இருப்பினும் பணிகள் மெதுவாக ஆமை வேகத்தில் நடைபெற்றதால், அடிக்கடி மதுரை ரயில்நிலையம், மீனாட்சி பஸ் நிலைய பகுதிகளில் மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்தப் பிரச்னை குறித்து ஊடகங்கள் அடிக்கடி சுட்டிக்காட்டின, இதை அடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டு, முயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றது! மதுரை காளவாசல் மேம்பாலப் பணிகளும் விரைவில் முடியும் தறுவாயில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை