கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களின் பங்கு அளப்பறிய ஒன்று என்பது நம்மில் பலரும் அறிந்ததுதான்.
இவர்களின் பணி மைதானம் தயார் நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்வது முதல், வீரர்களின் அப்பில்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குவது வரை தொடர்கிறது.
களத்தில் உள்ள வீரர்கள் அதிக அழுத்தம் கொடுக்கும் போதிலும், அவர்களுக்கு சாதுர்யமான முடிவுகளை இவர்கள் வழங்குகின்றனர்.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்கள் ஆட்டக்காரர்களையும் பந்தின் அசைவையும் தான் பார்க்கிறார்கள்.
பந்து வீசும் அணியினர் அல்லது பந்து வீச்சாளர்கள் நடுவரிடம் அப்பில் செய்யும் போது தான் அவர்களின் பார்வை நடுவரை நோக்கி நகர்கிறது.
இருப்பினும், சில கிரிக்கெட் நடுவர்கள் தங்களது சிறப்புத் திறமை மற்றும் செயல்திறன்களால் பார்வையாளர்களின் கவனத்தை அடிக்கடி பெறுகின்றனர்.
அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது தீர்ப்பளிக்கும் சிறப்பான பாணியால் மிகவும் பிரபலமான நடுவராக ‘பில்லி பவுடன்’ அறியப்படுகிறார்.
இவருடையாக நீட்டிச்சியாக இன்னும் சில களநடுவர்களை நாம் பார்த்தது உண்டு. இதில், கடந்த டிசம்பரில், இந்தியாவின் மகாராஷ்டிராவில் நடந்த புரந்தர் பிரீமியர் லீக்கின் போது, நடுவர் ஒருவர் ‘வைட்’ என சிக்னல் அளிக்க, கைகளுக்குப் பதிலாக கால்களைப் பயன்படுத்தி இருந்தார்.
இதன்மூலம் அவர் பார்வையளர்களின் கவனத்தை பெற்றிருந்ததோடு, அவரது வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு நெட்டிசன்களின் பாராட்டையும் பெற்றது.
இந்த நடுவரைப்போலவே, ஒடிசா கிரிக்கெட் நடுவர் ஒருவர் பார்வையளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு இணையத்தையும் கலக்கி வருகிறார்.
ஒடிசாவின் நடன நடுவர்’ என அழைக்கப்படும் அவருடைய பெயர் பப்லு சாஹு. இவர் அம்மாநிலத்தில் உள்ள தேன்கனல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
19 வயதான பப்லு சாஹு பரஜாங்கா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு அறிவியல் படித்து வருகிறார். இசையின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடும் இவர் ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் அடையாளம் காட்டுகிறார்.
மேலும், தனது நடன அசைவுகளால் ‘ஃபோர் ரன்’, ‘சிக்ஸ் ரன்’ மற்றும் ‘அவுட்’ என்று சைகை செய்து அசத்துகிறார்.
இப்படி தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் பப்லு சாஹுக்கு பல்வேறு இடங்களில் இருந்து நடுவராக வாய்ப்பு வரத் தொடங்கியுள்ளது.
மேலும், அவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.
பப்லு சாஹு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். நடுவராக பணியாற்றி கிடைக்கும் வருமானத்தை தனது கல்விக்காக செலவிட்டு வருகிறாராம்.