உலகின் மிக நீளமான கொடிய விஷம் கொண்ட நச்சுப் பாம்பு இனமாக திகழ்வது ராஜநாகம். அதனால் தான் அதனை நாகங்களுக்கு அரசன் என பொருள்படும் வகையில் பெயரிட்டுள்ளனர்.
பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்ட இப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் வரை வளரக் கூடியதாகும். இவை பிற பாம்புகளை உணவாக கொள்கின்றன. மிக மிக கொடிய விஷமுடைய இந்த நாகத்தின் ஒரு கடியே ஒரு மனிதனை கொல்லவல்லதாகும். இந்த நாகத்தின் கடியால் இறப்பு நேரிடும் விகிதம் 75% ஆக உள்ளது. இப்பாம்பினைக் கண்டாலே பலரும் மிரண்டு ஓடவே செய்வார்கள். இந்த பாம்பு கடித்தால் ஒரு யானையே 3 மணி நேரத்தில் இறந்துவிடுமாம்.
இத்தனை கொடிய விஷப்பாம்பை தனி ஒருவரால் கையாளுவது பெரும் சிரமம் என கூறப்படுகிறது. அப்படியிருக்க, 14 அடி நீளமுடைய ராஜநாகத்தை வெறும் கைகளால் துணிச்சலாக ஒருவர் பிடித்திருக்கிறார்.
தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிராபி எனும் மாகாணத்தில், ராஜநாகம் ஒன்று பனைத்தோட்டத்துக்குள் புகுந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதன்படி பாம்பு பிடிப்பதில் வல்லவரான 40 வயதுடைய Naewhaad, மாவட்ட நிர்வாகத்தினர் அனுப்பிய தன்னார்வலரான Ao Nang உடன் இணைந்து அங்கு சென்றிருக்கிறார்.
செப்டிக் டேங்க் ஒன்றில் மறைந்து கொள்ள முயற்சி செய்த அந்த ராஜநாகத்தை பார்த்த Naewhaad, அதனை பிடிக்க ஏதுவாக கடும் முயற்சி செய்து திறந்தவெளி பகுதிக்கு போக்கு காட்டி அழைத்து வந்தார். அதன் பின்னர் அந்த பாம்பினை வெறும் கைகளால் பிடிக்கும் முயற்சிகளில் Naewhaad ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் Naewhaad-ன் நெருங்கிச் சென்று தனது வாயை திறந்து ராஜநாகம் பயம் காட்டியது. ஒருவழியாக அதில் இருந்து தப்பிய Naewhaad, தொடர்ந்து பாம்பினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு 20 நிமிடங்கள் போராட்டத்தின் முடிவாக ஆளுயர ராஜநாகத்தின் தலையை லாவகமாக கைப்பற்றி, பின் பாம்பின் உடலால் தன்னை வளைக்க முடியாதபடி, கால்களால் கெட்டியாக அதனுடைய உடலை பிடித்துக் கொண்டு அந்த பாம்பினை பத்திரமாக கொண்டு வந்திருந்த பையில் போட்டார்.
பிடிபட்ட பாம்பினை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக Naewhaad விட்டிருக்கிறார். அந்தப் பாம்பு தனது இணையை தேடி அங்கு வந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஏனென்றால் சமீபத்தில் தான் அங்கு ஒரு ராஜ நாகத்தை அவர்கள் அடித்துக் கொன்றிருக்கின்றனர். கொல்லப்பட்ட பாம்பு, பிடிபட்ட ராஜநாகத்தின் இணையாக இருக்கக்கூடும்.
தன்னைப் போல யாரும் வெறும் கைகளால் பாம்பு பிடிக்க வேண்டாம் என Naewhaad எச்சரித்தார். தன்னால் இதை செய்ய முடிந்ததற்கு பல வருட பயிற்சியும், அனுபவமுமே காரணம் என அவர் தெரிவித்தார்.
Naewhaad ராஜ நாகத்தை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்வையாளர்களால் மிரட்சியுடன் பார்க்கப்பட்டு வருகிறது.