மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசுவரப் பெருமானுக்கும் இன்று காலை திருக்கல்யாண உத்ஸவம் சிறப்பாக நடந்தேறியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை வழிபட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அடுத்த முக்கிய உத்ஸவமான திருக்கல்யாண உத்ஸவம், வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதற்காக வடக்கு ஆடி- மேற்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மேடை வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானை ஆகியோர் மணமேடையில் எழுந்தருளினர். அதன் பிறகு மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடைக்கு வந்ததும் திருமண வைபவம் தொடங்கியது. குலசேகரபட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும், வேடம்பூண்டு மாலை மாற்றிக் கொண்டனர்.
அம்மன்-சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாற்றப் பட்டு மணப்பெண் சார்பில் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்கள் நலுங்கு செய்தனர். காலை 9.25 மணிக்கு மிதுன லக்னத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கல நாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுத் திருமாங்கல்யம் அணிந்து கொண்டனர்.
திருக்கல்யாணம் முடிந்ததும் அம்மன்-சுவாமி ஆகியோர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
இன்று இரவு அனந்த ராயர் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் அம்மனும், சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். அப்போது மாசி வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்கிறார்கள்.
சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நாளை (28-ந்தேதி) காலை தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (29-ந்தேதி) தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. அடுத்து அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 30-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
திருக்கல்யாணம் முடிந்ததும் காலை 9.30 மணி முதல் மேற்கு, வடக்கு, தெற்கு கோபுர நுழைவு வாயில்களில் தாலி கயிறு, மஞ்சள்கிழங்கு, தாழம்பு குங்குமும், விபூதி, பிஸ்கெட் பாக்கெட், குடிநீர் பாக்கெட் அடங்கிய 50 ஆயிரம் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.