சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ்., உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, முதல்வராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். திடீரென அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். இதனால், தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று கூறி, திடீரென தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்., சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகு 2017 பிப்ரவரி 16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். தொடர்ந்து ஆளுநரின் உத்தரவுப்படி அடுத்த இரு நாட்களில் சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ், அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அதில், பழனிசாமி அரசு வெற்றி பெற்றது என்றாலும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி திமுக கொறடா அர.சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி டிடிவி தினகரன் ஆதரவாளர் பி.வெற்றிவேல் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில், திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு இன்று மதியம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ்.,ஸுக்கு எதிராக வந்தால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




