ராகுல்காந்தி ஒவ்வொரு முறை வாயைத் திறக்கும் போதும் நாட்டின் பெரும்பாலான இந்தியர்கள் என்ன நினைப்பார்களோ அதை காங்கிரஸ் எம்பி ஒருவர் செயல்படுத்தி காட்டியிருக்கிறார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை கேட்டு முகம் சுளித்து தலையில் அடித்துக்கொண்டு தன்னுடைய அருவருப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பரம்பரை தலைவர் ராகுல் காந்தி பேச பேச அவர் பின்னால் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் முகத்தை சுளித்துக் கொண்டு தலையில் அடித்து தன் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.
நான் ஒரு ஜனநாயகவாதி, மற்ற நபரை பேச அனுமதிப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தி பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 31-ம் தேதி உரை நிகழ்த்தினார். நேற்று முன்தினம் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் பரம்பரைத் தலைவரும், எம்பி.,யுமான ராகுல் பேசினார். அப்போது, மத்திய அரசின் மீது மனம்போல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அப்போது ‘‘நீங்கள் யார் பேசுவதையும் கேட்பதில்லை. பாஜக.,வில் உள்ள என் சகோதர சகோதரிகள் பேச்சைக்கூட கேட்பதில்லை. தலித் சகா பேசுவதை நான் பார்த்தேன். அவருக்கு தலித் வரலாறு தெரியும். 3000 ஆண்டுகளாக தலித்துகளை ஒடுக்கியது யார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் தயக்கத்துடன் பேசுகிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மனதில் உள்ளதை என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தவறான கட்சியில் இருக்கிறார்’’ என்றார்.
உடனே பாஜக., எம்பி., பஸ்வான் எழுந்து பேச முயற்சி செய்தார். அதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா, தற்போது பேச அனுமதி இல்லை. ராகுல் பேசும்போது குறுக்கிட வேண்டாம். உங்களுக்கு பிறகு நேரம் தருகிறேன் என்றார். ஆனால் ராகுல், பஸ்வானைப் பார்த்து, நீங்கள் பேசுவதற்கு நான் அனுமதிக்கிறேன் என்றார்.
இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம்பிர்லா, ‘‘அவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க நீங்கள் யார்? இந்த அவையில் ஒருவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது என்னுடைய உரிமை; அதை நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது’’ என்றார். இதைக் கேட்டு அசட்டுத்தனமாக வழிந்த ராகுல், பின் தொடர்ந்து, ‘‘நான் ஜனநாயகவாதி. மற்றவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பேன்’’ என்று மீண்டும் பேசினார்.
காங்கிரஸின் பரம்பரைத் தலைவராக இருந்து கொண்டு, மற்ற எவரையும் அந்த இடத்துக்கு வரவிடாமல் இளவரசுத்தனம் காட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் ஒரு ஜனநாயகவாதி என்று குறிப்பிட்டது கேலிக்கூத்தாக உள்ளது என்று பலர் அதற்கு கருத்து தெரிவித்தனர்.