
சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ., தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் தென் கிழக்கில் 200கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டு13 கி.மீவேகத்தில் நகர்கிறது. 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 5 அடி உயரம் வரை ஆக்ரோஷமாக எழும் கடல் அலைகள் எழுந்தது.சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை: இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
மாமல்லபுரத்தில் கடல் ஆக்ரோஷம்; 10 அடி உயரம் வரை கொந்தளிக்கும் அலைகள் எழுந்தது.இன்று இரவு இப்பகுதியில் புயல் கரையை கடக்கிறது.நாகை கடற்கரையில் காலை முதலே கடும் கடல் சீற்றம் கொண்டது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், வேலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.