பேஸ்புக் பயன்படுத்துபவரா? அவசியம் இதைப் படிங்க!

facebook-siva பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? காதல், பணத் தேவை என வருபவர்களை தவிருங்கள்! இளைஞர் அட்வைஸ்! ==================================================== விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி. இவர் பேஸ்புக்கில் தனக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம், தனது உறவினர் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதி சடங்குக்கு பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சென்னையைச் சேர்ந்த சிவா என்பவர், தன்னிடம் பணம் இல்லை என்று அருண் பாலாஜியை சந்தித்து, தனது திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் ஒரு சில மணி நேரங்களில் அருண் பாலாஜியின் செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒரு வாரம் கழித்து அருண் பாலாஜியை தொடர்புகொண்ட சிவா, செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது பற்றியும், உறவினர் இறுதி சடங்கு பிரச்சனையில்லாமல் நடந்ததா என்றும் விசாரித்துள்ளார். மேலும், தனக்கு அந்த மோதிரத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அவர், மோதிரத்தை அடகு கடையில் இருந்து மீட்க ரூபாய் 3 ஆயிரம் குறைவதாகவும், அதனை தந்தால் மோதிரத்தை மீட்டு விடலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த சிவா, அவரை நேரில் சந்தித்து பணம் கொடுப்பதாக கூறி வரசொல்லியுள்ளார். நேரில் சந்தித்ததும், அருண் பாலாஜி மீது சந்தேகம் அடைந்த சிவா, தனது நண்பரிடம் பணம் வாங்கித் தருவதாக கூறி, கொரட்டூர் காவல்நிலையம் அருகே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே அருண் பாலாஜி செயல்கள் குறித்து சந்தேகம் அடைவதாக போலீசாரிடம் செல்போனில் ஆலோசனை செய்தார் சிவா. இதனால் கொரட்டூர் காவல்நிலையம் அருகே தயாராக இருந்த போலீசார் அருண் பாலாஜியை மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில், இதேபோன்று பலரிடம் பணம் வசூல் செய்திருப்பதாகவும், பேஸ்புக்கில் நண்பராக வந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி, அப்பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு பின்னர் அப்பெண்ணின் பேஸ்புக் அக்கவுண்டை பிளாக் செய்துவிட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் மூன்று விதமான அடையாள அட்டைகள் வெவ்வேறு பெயரில் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிவா கூறுகையில், பேஸ்புக் நண்பர்கள் என கூறிக்கொண்டு காதலிப்பதாக வருபவர்கள், பணத் தேவை என்று வருபவர்களை நம்ப வேண்டாம். கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் உண்மையிலேயே பணத் தேவை உள்ளவர்களை நாம் எப்படி அடையாளம் காண்பது என்றும் வேதனை அடைந்தார். ==================================================== #Rajacse நன்றி : ஊழலுக்கெதிரான ஒன்றுபட்ட இந்தியா