spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப்படை

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப்படை

thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 289
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்

கடிமா மலர்க்குள்– சுவாமிமலை
திருமுருகாற்றுப்படை

நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை ‘உலகம்’ என்ற மங்கலச் சொல்லுடன் ஆரம்பிக்கின்றது.

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்

உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு வெயிலும் வெளிச்சமும் தரும் பொழுது உலகை வலம்வருகிறது. காலைக் கதிரவன் கடலை உழுவது கண்கொள்ளாக் காட்சி. அதன் கவின் பேர் அழகைப் பலரும் புகழ்கின்றனர். அதைப்போலத்தான் முருகன் இமைக்கிறான். அருட்பார்வை வழங்குகிறான். அவனது அருள்ஒளி கட்டவிழ்ந்து பாய்கிறது. தடை இல்லாமல் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்திலும் காலவெள்ளத்திலும் பாய்கிறது.துன்புறுவோரைத் தாங்குவதே முருகனது மதக்கொள்கை. அவனது திருவடிகளின் நோன்பும் அதுதான். துன்பத்தைப் போக்கும் அவன் செயலை எதிர்த்தவர்களை அத்திருவடிகள் மிதித்துத் தேய்க்கும். மழைபோன்று உதவுவது அவனது கைகள். களங்கமில்லாத கற்புநெறியினளாகிய தெய்வானைக்கு அவன் கணவன்.

துன்பம் நீங்கி வாழ்வதே இன்பம். பொருள்செல்வம் இருந்தால் தான் இந்த உலகில் இன்பமாக வாழலாம். இதைப்போல் இறப்புக்குப் பின் உள்ள மறுமை உலக வாழ்க்கைக்கு அருள்செல்வம் வேண்டும்.

பொருள் செல்வத்தை அடைவதற்கு ஒரு வள்ளலிடம் செல்வதற்கு வழி சொல்லுபவை, நாம் முன்பு கண்ட ஆற்றுப்படைப் பாடல்களும், பத்துப்பாட்டின் மற்ற நான்கு ஆற்றுப்படை இலக்கியங்களும்! அருள் செல்வத்தை அடைவதற்காக, உலகை எல்லாம் படைத்து, அளித்து, காக்கும் வள்ளல் ஆகிய இறைவனிடம் செல்வதற்கு வழி கூறுவது திருமுருகாற்றுப்படை.

இதற்கு முருகு, புலவர் ஆற்றுப்படை என்ற வேறு பெயர்களும் உள்ளன. திருமுருகாற்றுப்படை 317 அடிகள் கொண்டது. பொருளை எவரிடத்தில் இருந்தும் எந்த வழியிலும் பெற முடியும். ஆனால் அருள் உள்ளம் என்பது கடவுளால் மட்டுமே அருளப்படுவது.

அதைப் பெறுவதே மறுமை வாழ்வுக்குச் சிறந்தது என்னும் உயர்ந்த நோக்கத்துடன், முருகனிடமிருந்து அருளைப் பெற்ற ஓர் அரும்புலவன் மற்றவனுக்கு அதைப் பெறவழி சொல்வதாக, ஆற்றுப்படையாக நக்கீரர் இந்நூலை இயற்றியுள்ளார். ஆன்மிக ஆற்றுப்படையாக அமைந்துள்ள இந்நூல் ஆறுமுகன் ஆகிய முருகன் காட்சி தரும் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அருள் பெற வழிகாட்டுகிறது; ஆறுபகுதிகளாக அமைந்துள்ளது.

இதன் முதல் பகுதி முருகனின் திரு உருவச் சிறப்பைக் கூறுகிறது; அவன் அணியும் மாலைச் சிறப்புகளை வருணிக்கிறது; ஆடல் பாடல் முதலியவற்றால் அவனைத் தெய்வ மகளிர் வாழ்த்துவதைக் கூறுகிறது; சூரபதுமனை அழித்த முருகனின் வீரத்தைப் பேசுகிறது;. மதுரை நகரின் பெருமையையும் திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளத்தையும் சொல்கிறது. இப்பகுதியில் வண்டுகளால் எச்சில் படாத காந்தள் மலர்களால் ஆன கண்ணியைத் தலையில் சூடிய முருகனின் தோற்றத்தை,

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

என வருணிக்கிறார் நக்கீரர்.

இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் என்றும் செந்தில் என்றும் இன்று வழங்கும் திருச்சீர் அலைவாய் காட்டப்படுகிறது. அங்கு எழுந்தருளி அன்பர்க்கு அருள் வழங்கும் முருகனின் சிறப்புகளை நக்கீரர் பாடுகிறார். முருகனின் பிணிமுகம் என்னும் யானை ஊர்தி பாடப்படுகிறது.

ஆறுமுகங்களின் செயல்களும் பன்னிரு கைகள் ஆற்றும் பணிகளும் கூறப்படுகின்றன. அடுத்த பகுதியில் திரு ஆவினன் குடி என்னும் பழனி மலையில் எழுந்தருளும் முருகனின் அழகுத் தோற்றம் காட்டப்படுகிறது. முனிவர், தேவர் மற்றும் உருத்திரர், திருமால் முதலிய தெய்வங்களும் முருகனை வழிபடுகின்றனர்.

பிரணவம் என்னும் மந்திரம் தெரியாததால் முருகனால் சிறையில் அடைக்கப்பட்டான் பிரமன். அவனை, விடுவிக்குமாறு இவர்களெல்லாம் வந்து வழிபடுவதாக நக்கீரர் பாடுகிறார். பின்னர் திருவேரகம், திருத்தணிகை மற்றும் குன்றுதோறாடல் தலங்களைப் பாடுகிறார். மூன்று தீ வளர்த்து அந்தணர்கள் வழிபடும் திரு ஏரகம் சென்றாலும் முருகன் அருள் கிடைக்கும் எனப்பாடுகிறார்.

திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன் கைகோத்து ஆடல் கோலத்துடன் அமைந்த தோற்றப் பொலிவைக் கண்டு மகிழச் சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe