— ஆர். சுதாகர் —
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட காலனித்துவ காலத்து சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (IPC-1860) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC-1973) இந்திய சாட்சியங்கள் சட்டம் (IEA 1872) ஆகிய சட்டங்களுக்கு பதிலாக இந்திய சட்ட அமைப்பை நவீன மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு முறையே பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹீதா (BNSS), பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) என மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
நமது நீதி மன்றங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பினை அடைவதற்கு நடைமுறை காரணங்களால் காலதாமதம் ஏற்படுகிறது. குற்ற வழக்குகளில் சாட்சியங்கள் மிக முக்கியம், தற்போதய நிலையில் சாட்சிகளுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை.
மேலும் காவல்துறையால் குற்ற வழக்குகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவேண்டும் என்ற விதிகளும் இல்லை மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான கொடும் குற்றங்களுக்கு உரிய தண்டனை பழைய சட்டங்களில் இல்லை. இது போன்று, மேலும் உள்ள குறைபாடுகளை களைந்து திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
மூன்று சட்டத்திருத்தின் முக்கிய அம்சங்கள்:
காலனித்துவ மரபுகளை அகற்றுத்தல்:
காலனித்துவ கால குற்றவியல் சட்டங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிப்பதில் முதன்மையான கவனம் செலுத்தியது. ஆனால் இப்புதிய சட்டங்கள் வெறும் தண்டனை இல்லாமல் நீதி(NYAY) என்ற கருத்தை வலியுறுத்துகின்றது.
மேலும், இச்சட்டங்கள் வெளிப்படையானவை, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதி கொள்கைகளை பூர்த்தி செய்வதையே பிரதானமாக கருதுகிறது. மேலும் இந்தப் புதிய சட்டத்தில் தேசத் துரோகம் என்ற பழைய குற்றவியல் சட்டத்திலிருந்த வார்த்தை நீக்கப்படுள்ளது.
மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான புதிய அத்தியாயம்:
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை அவரது உறவினர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில் பெண் போலீஸ் அதிகாரி ஆடியோ விடியோ பதிவாக பதிவு செய்தல் வேண்டும் மருத்துவ அறிக்கைகள் ஏழு நாட்களுக்குள் வரவேண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபருக்கு 90 நாட்களுக்குள் தான் சம்பந்தப்பட்ட வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்துக் கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.
திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுதல், நகை பறிப்பு கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள், போன்ற குற்றங்களுக்கு இதற்கு முன்பு இருந்த இந்திய தண்டனைச் சட்டத்தில் விதிகள் இல்லை. ஆனால் இப்புதிய சட்டத்தில் அதற்கான விதிகள் இயற்றப்பட்டுள்ளன.
குழந்தைகளை முறையான அனுமதி இல்லாமல் வாங்குவதும், விற்பதும் இச்சட்டத்தின் படி கடுமையான குற்றம். பாலினம் பற்றிக் குறிப்பிடுகையில் மாற்று பாலினத்தவரும் இனி சேர்த்துக்கொள்ளப்படுவர்.
நீதித்துறை சீர்திருத்தங்கள்:
காலம் கடந்த நீதி அநீதி என்பதை மையமாகக் கொண்டு இப்புதிய சட்டங்கள் நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அவை பின்வருமாறு:
நீதிபதிகளை அதிகரிப்பது, நீதிமன்ற விடுமுறைகளை குறைப்பது. நிலுவைகளைக் கையாள்வது மற்றும் அனுமதிப்பது போன்றவற்றிற்கு வழி வகைச் செய்கிறது.
அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் எந்த ஒரு நபரும் எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ எஃப்.ஐ.ஆர் (Zero FIR) பதிவு செய்ய இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.
குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.
நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணை ஒத்தி வைக்க முடியும் என்ற காலக்கெடுவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரைவான நீதி வழங்குதலை உறுதி செய்கிறது.
மேலும் சாட்சி பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தி அவர்களது கண்ணியம் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இப் புதிய சட்டங்கள் வழிவகைச் செய்கிறது எனவே புதிய சட்டத்தின்படி நீதி விரைவாக வழங்குவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் இருவருக்கும் சமச்சீர் நீதி வழங்குதலை இது உறுதிச்செய்கிறது
மின்னணு அல்லது டிஜிட்டல் ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளுதல்:
இப்புதிய சட்டம் நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களில் மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறது.
வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல் மயம் ஆக்கப்படும். மின்னணு பதிவுகள் காகித பதிவுகள் போல செல்லுபடி ஆகும் என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது.
ஆதாரங்களின் தரத்தை வலுப்படுத்த ஆடியோ விடியோ பதிவுகளும் இதில் அடங்கும். மேலும் குற்றச்சம்பவங்கள் பற்றி மின்னணு சாதனங்கள் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம், இதன் மூலம் காவல் நிலையத்துக்கு தான் நேரில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் தவிர்க்கப்பட்டு எளிமையாக புகார் அளிக்க வழிவகை செய்கிறது.
மிகவும் மோசமான கிரிமினல் குற்ற சம்பவங்களின் போது நிகழ்விடத்துக்கு தடையவியல் நிபுணர்கள் செல்வது கட்டாயமாக்கப்படுகிறது சம்மன்களை மின்னணு உபகரணங்கள் வாயிலாகவும் அனுப்பலாம், இதன் மூலம் வழக்கு விசாரணையில் ஏற்படும் வீண் தொய்வை தடுக்க இயலும். அதே போல் மிக மோசமான குற்றச்செயல்களில் உள்ள நிகழ்விடத்தினை விடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.
தடுப்புக் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்களை மாஜிஸ்ட்ரேட் விடியோ மூலம் விசாரிக்க முடியும் இதனால் விரைவாக நீதி வழங்க இது வழிவகை செய்கிறது.
விசாரணை தரம் மேம்படுத்துதல்:
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் விசாரணையை தவிர்க்க தலைமறைவாகிவிட்டால் அவரை உடனடியாக கைது செய்ய வாய்ப்பில்லை என்றால் அவர் இல்லாத நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படலாம்.
மாதிரி கையொப்பங்கள் அல்லது கையெழுத்துடன் விசாரணை அல்லது நடவடிக்கைகளுக்காக விரல் பதிவுகள் மற்றும் குரல் மாதிரிகள் சேகரிக்கப்படலாம், கைது செய்யப்படாத ஒருவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்படலாம்.
தற்போதைய 15 நாள் வரம்பிலிருந்து 90 நாட்கள் வரை போலீஸ் காவலில் தடுப்பு காவலை இச்சட்டம் நீடிக்கிறது. குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதி சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு CrPC ஜாமீன் வழங்குகிறது. ஆனால் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவருக்கும் ஜாமீன் வசதியை இப்ப புதிய சட்டம் மறுக்கிறது.
கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்படுபவர் தான் விரும்பும் ஒரு நபருக்கு தனது கைதுப் பற்றிய தகவலை அளிக்கலாம் கைது செய்யப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் மாவட்ட தலைமையகத்தில் பொது பார்வைக்கு வைக்க வேண்டும்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட குற்றத்தின் வருமானத்திலிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரங்களுக்கு இப் புதிய சட்டத்தில் பாதுகாப்பு இல்லை
கொலை, பாலியல் வன்கொடுமை, அரசுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்கள், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணான பொருளாதார குற்றங்களை செய்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கை விலங்குகளை பயன்படுத்துவது அனுமதி அளிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வேரூன்றிய பழையச்சட்டங்கள் திருத்தங்கள் இருந்தபோதிலும் நவீன இந்தியாவின் ஆற்றல் மிக்க சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டன.
தற்போதைய சமூக மதிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு 21 ஆம் நூற்றாண்டிற்கான நீதித்துறை செயல்முறைகளை நெறிப்படுத்தவும், குடிமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், காலம் தாழ்த்தாத நீதி வழங்கவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை சட்ட கட்டமைப்பில் உட்பொதிக்கவும் இம் மூன்று புதிய சட்டங்கள் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரையாளர்: வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி