தென் இந்தியாவின் புண்ணிய தலம் காளி மலை – தமிழகத்தின் தென்கோடி கன்யாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு தாலுகாவில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், மலையின் மீது பொங்கலிடும் ஒரே இடம் தென்னிந்தியாவின் புண்ணிய தலம் காளிமலை.

இம்மலையில் தவம் செய்த அகஸ்திய முனிவருக்கு மூம்மூர்த்திகள் காட்சி அளித்த பெருமை காளிமலையை சாரும்! முனிவரின் தவத்தில் தோன்றிய வற்றாத நீரூற்று காளி தீர்த்ததாக இன்றும் சுரந்து கொண்டு இருக்கிறது.

மருத்துவ குணம் கொண்ட இந்த நீரை நோய் தீர்க்கும் மருந்தாக கங்கை நீரை போன்று பக்தர்கள் வீடுகளில் பாதுகாத்து வருகிறார்கள். இப்புனித மலையில் ஸ்ரீ துர்கா தேவி, ஸ்ரீ தர்ம சாஸ்தா நாகயக்க்ஷி, ஆகியோர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். குழந்தை பேறு கிடைக்காதவர்கள் குழந்தை கிடைப்பதற்காக இம்மலையில் வந்து நாகயக்ஷிக்கு பூஜை செய்து அருள் பெற்று செல்கின்றனர்.

காளி மலையில் அந்நூரி நெல் என்ற அற்புத நெல் இருக்கிறது, காலையில் பூத்து மதியம் கதிராகி மாலையில் சூரியன் மறையும் முன்பாக நெல்லாக உதிர்ந்து போவது தான் இந்த அந்நூரி நெல்லின் சிறப்பு. இந்த நெல்லை உதிர்த்து பக்தர்கள் கொண்டு வரும் அரிசியும் சேர்த்து தேவிக்கு பொங்கலிடுவது பழங்கால வழக்கம்.

பொங்கல் இடும் போது பொங்கல் பானையில் இருக்கும் அரிசி முழுவதும் பொங்கலையாக வெளியேறுவதை பார்க்கலாம்! இதை தேவி மனம் மகிழ்ந்து ஏற்று கொண்டாதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

கன்யாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியான கடையாலுமூடு பேரூராட்சி பத்துகாணிக்கு அண்மையில் தான் வரம்பொதி மலை என்ற காளிமலை தேவியின் இருப்பிடமாகத் திகழ்கிறது.

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா மஹாராஜாவை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் எதிரிகள் துரத்தி வந்த போது இம்மலையில் இருக்கிற சூலம் குத்தி பாறை அடிவாரத்தில் வனவாசிகளுடன் தங்கினார்! அப்போது,  மன்னரை காப்பாற்ற வனபாலகானாக காட்சியளித்த ஸ்ரீ தர்மசாஸ்தா எதிரிகளிடம் இருந்து மன்னரை காப்பாற்றினார்!

இதனால் மனம் மகிழ்ந்த மன்னர் கோவிலைப் புனரமைப்பதற்காக 600 ஏக்கர் நிலத்தை வரியில்லா பூமியாக செம்பு பட்டயம் வழங்கியும் பத்து (10)காணி இன மக்களை குடியமர்த்தி கோவிலை பராமரிப்பதற்கும் உத்தரவிட்டார் என்பது சரித்திரச் செய்தி.

மேற்குத் தொடர்ச்சி மலைகளும், பேச்சிபாறை, சிற்றாறு-1, சிற்றாறு – 2, நெய்யாறு அணைகளும் இம்மலையில் இருந்து பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது!

சூரிய அஸ்தமனக் காட்சியை இம்மலையில் இருந்து தெளிவாகப் பார்த்து ரசிக்கலாம்! இவ்வளவு பெருமை வாய்ந்த காளிமலை கோவிலில் தரிசனம் செய்வது நமது வாழ்வில் முன்னேற்றம் தரும் !

வருடம் தோறும் சித்திரை பெளர்ணமி அன்று பகலில் தமிழக கேரள பக்தர்களால் பொங்கலிட்டு கருட தரிசனம் கண்டு பக்தர்கள் காளி தேவியின் அருள் பெறுகிறார்கள்!

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடை திறந்து வழிபாடுகள் நடைபெறும்!

ஒவ்வொரு மாதம் பெளர்ணமி தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும்
மாலை திருவிளக்கு பூஜையும் நடை பெறும்.

– நாஞ்சில் ராஜா, காளிமலை சேவா சமிதி!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...