
காமன்வெல்த் போட்டிகள் – ஏழாம் நாள் – 04.08.2022
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஏழாம் நாள் இறுதியில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 20 பதக்கங்கள் பெற்றுள்ளது.
நேற்று உயரம் தாண்டுதலில் டெல்லியைச் சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் பெற்றார். இவர் 2.22 மீட்டர் தாண்டினார். இவரது பயிற்சியாளர் திரு நல்லுசாமி அண்ணாவி 1984இல் 2.12 மீட்டர் தாண்டியதை அப்போது நாடே அதிசயமாகப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பாரா பவர் பளு தூக்கும் வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றார்.
இன்று தடகள வீராங்கனை ஹிமாதாஸ் 200 மீட்டர் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். குண்டெறிதல் போட்டியில் மஞ்சு பாலா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷயா சென் இருவரும் ஆண்கள் பிரிவில் முதல் சுற்றில் வெற்றிபெற்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சுமித் ரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் தோல்வியடைந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகர்ஷி கஷ்யப் முதல் சுற்றில் வென்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் பாவினா படேல் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
குத்துச்சண்டை 51 கிலோ ஆண்கள் பிரிவில் அமித் பங்கல் ஸ்காட்லாந்து வீரரை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். பெண்கல் 60 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மின் நியூசிலாந்து வீராங்கனையைத் தோற்கடித்து அரையிறுதிக்குச் சென்றார்.
ஆண்கள் 90 கிலோ பிரிவில் சாகர் சிசேல்ஸ் வீரரைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். லான் பவுல்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மிருதுல் போர்கொஹைன் தோல்வியடைந்தார். ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி (சாராகுருவில்லா & ஆஹத் சிங் ஜோடி) இலங்கை அணியை வென்றது.
ஆனால் அடுத்த சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியது. மற்றொரு பெண்கள் அணி ஜோஷ்னா சின்னப்பா & தீபிகா பல்லிகல் பார்படாஸ் ஸ்ணியை வென்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் வேலவன் செந்தில்குமார் & அபய் சிங் முதல் சுற்றில் வென்றுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் (கிரிக்கட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி) & சௌரவ் கோஷல் இருவரும் வேல்ஸ் அணீயைத் தோற்கடித்தனர்.
ஹாக்கியில், ஆண்கள் பிரிவில் இந்தியா வேல்ஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் சத்தியன் & மணிகா பாத்ரா ஜோடி சிசேல்ஸ் அணியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு இந்திய ஜோடியான சரத் கமல் & ஸ்ரீஜா அகுலா ஜோடி அயர்லாந்து ஜோடியை வென்றது. பெண்கள் ஒற்றையர் போட்டியில் ஸ்ரீஜா அகுலா, ரீத் டென்னிசன், மணிகா பாத்ரா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் போட்டியில் ஹர்மீத் தேசாய் & சனில் ஷெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.