- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
49ம் நாள்: ஐபிஎல் 2024 – 08.05.2024
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இன்று ஹைத்ராபாத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
லக்னோ அணியை (165/4, ஆயுஷ் பதோனி 55*, நிக்கோலஸ் பூரன் 48*, கே.எல். ராகுல் 29, க்ருணால் பாண்ட்யா 24, புவனேஷ் குமார் 2/12) ஹத்ராபாத் அணி (9.4 ஓவரில் 167/0, ட்ராவிஸ் ஹெட் 89*, அபிஷேக் ஷர்மா 75*) 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (2 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (3 ரன்) அவிட்டானார்.
அதன் பின்னர் க்ருணால் பாண்ட்யா (21 பந்துகளில் 24 ரன்) ஆட வந்தார். அவர் கே. எல். ராகுல் (33 பந்துகளில் 29 ரன்), இணைந்து மிக நிதானமாக ஆடினார். க்ருணால் 11.2ஆவது ஓவரிலும், ராகுல் 9.6ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பதிலாக ஆடவந்த நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 48 ரன்), ஆயுஷ் பதோனி (30 பந்துகளில் 55 ரன்) அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 165 ஆக உயர்த்தினர்.
19ஆவது ஓவரில் 15 ரன்னும், 20ஆவது ஓவரில் 19 ரன்னும் அடிக்கப்பட்டது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது.
166 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய ஹதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் போரல் (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன், 8 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன், 8 ஃபோர், 8 சிக்சர்) இருவரும் 9.4 ஓவர்களில் 167 ரன் அடித்து மிக மிக எளிதாக அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
லக்னோ அணிக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனப் புரிவதற்கு முன் ஆட்டம் முடிந்துவிட்டது. ட்ராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளிலும் 50 ரன் அடித்தனர்.
சன்ரைசர்ஸ் அணி பவர்பிளே ஓவர்களுக்குள் 100 ரன் அடித்துவிட்டது. தொடக்கத்தில் பந்துவீசும்போது அவர்களது பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் நாலு ஓவர் வீசி 12 ரன் கொடுத்து 2 விக்கட் வீழ்த்தியதே அணிக்கு ஒரு பெரிய பூஸ்ட் என்றால், பின்னர் ஹெட் மற்றும் அபிஷேக்கின் ஆட்டம் இந்தப் போட்டியின் ஏனைய போட்டிகளில் அவர்களை உயிர்ப்புடன் வைக்கும்.
அவர்கள் சந்தித்த 9.4 ஓவர்களில் ஒவ்வொரு இரண்டாவது பந்தும் சிக்சாகவோ ஃபோராகவோ இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் ட்ராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியில் வருகின்ற டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.
ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
08.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
கொல்கொத்தா | 11 | 8 | 3 | 16 | 1.453 |
ராஜஸ்தான் | 11 | 8 | 3 | 16 | 0.476 |
ஹைதராபாத் | 12 | 7 | 5 | 14 | 0.406 |
சென்னை | 11 | 6 | 5 | 12 | 0.700 |
டெல்லி | 12 | 6 | 6 | 12 | -0.316 |
லக்னோ | 12 | 6 | 6 | 12 | -0.769 |
பெங்களூரு | 11 | 4 | 7 | 8 | -0.049 |
பஞ்சாப் | 10 | 4 | 6 | 8 | -0.062 |
மும்பை | 12 | 4 | 8 | 8 | -0.212 |
குஜராத் | 11 | 4 | 7 | 8 | -1.320 |