October 13, 2024, 10:15 PM
29 C
Chennai

சிவகாசி- பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

crackers


சிவகாசி, மே 9: சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தனியா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5பெண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ளது செங்மகலப்பட்டி கிராமம். இங்கு, திருத்தங்கலை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இத்நிலையில், வியாழன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேதிப் பொருட்களில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு மற்றும் வெயிலின் சீற்றம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த 8 அறைகள் உடைந்து நொறுங்கியது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

வெடி விபத்து நடைபெற்ற அறையிலிருந்து தீயானது , அருகில் உள்ள பல்வேறு அறைகளுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பரவியது. இதனால், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிக் கொண்டே இருந்தன. இதன் காரணமாக யாரும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நீண்ட நேரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது . இதனால், மீட்பு பணியிலும் சில மணி நேரம் தொய்வு ஏற்பட்டது

ALSO READ:  பாஜக., ஆட்சியில்தான் 7 மடங்கு அதிக நிதி! ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் கடிதம்!

9 பேர் உயிரிழப்பு

பட்டாசு வெடிப்பது நின்றவுடன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியும் உடல் சிதறியும் கிடந்த 5 பெண் தொழிலாளர்கள் உட்பட 9 தொழிலாளர்களின் உடலை மீட்டனர்.

இறந்தவர்களின் விவரம்:

சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச்சேர்ந்த மச்சக்காளை என்பவர் மனைவி முத்து(57), அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள் (80), கல்போது கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (29), மத்தியசேனை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் காளீஸ்வரன் (47) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் முகம் மற்றும் உடல்கள்சிதறி உள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

13 பேர் காயம் :

மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 13 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்படு, சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். பின்பு, அங்குள்ள நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

காயமடைந்தோர் விவரம்:

சிவகாசி, ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), அதே பகுதியைச் சேர்ந்த சித்விநாயகர் மனைவி மாரியம்மாள்(50), அய்யமபட்டியைச் சேர்ந்த இராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), மத்திய சேனையைச் சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா (48), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ரெக்கம்மாள் (40), ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி சுப்பலட்சுமி (62), ரிசர்வ் லைன் காந்தி நகரைச் சேர்ந்த மூக்கன் மகன் திருப்பதி(47), அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கண்ணன் (30), திருத்தங்கல்லைச் சேர்ந்த ஜெயராஜ் (42), மத்தியசேனையைச் சேர்ந்த பெருமாள் மகன் அழகுராஜா(30), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி அம்சவள்ளி(32), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி செல்வி (39) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

ALSO READ:  சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து!

ஆய்வு :

இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.

இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிஐடியு ஆறுதல் : விபத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன், சிஐடியு நிர்வாகிகள் கே.முருகன், பி.பாலசுப்பிரமணியன், எம்.முத்துச்சாமி, அம்பேத்குமரேசன், மாரிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிடுக : சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தாலும், உற்பத்தியாளர்களின் லாப வெறியின் காரணமாகவும், ஆலைகளை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்யாததாலும் தொடர் விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே, தமிழக அரசு, விதிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  இலவச யோகா விழிப்புணர்வு முகாம்!

மாநில அரசு பதில் தர வேண்டும்: பாஜக.,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொடரும் இந்த பட்டாசு தொழிற்சாலை மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே.

உரிமம் இல்லாமல் நடைபெறும் உற்பத்தி, விதிகளை பின்பற்றாமல் அல்லது பாதுகாப்பு விதிகளை மீறி நடைபெறும் தொழிற்சாலைகள் இயங்குவது அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சம், ஊழலினால் தான்.

ஒவ்வொரு முறையும் இது போன்ற மரணங்கள் நிகழு‌ம் போது சில லட்சங்களை இழப்பீடாக வழங்கி விட்டு அடுத்த மரணங்களை எதிர் நோக்கி காத்திருப்பது வெட்கக்கேடு. உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு நிறுவனங்களை ஆலோசித்து தீர்வு காண முனைய வேண்டும் தமிழக அரசு.

மேலும், இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது… என்று, பாஜக, மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week