தோஹா: சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், தங்கள் ஏர்ஹோஸ்டஸ் மற்றும் பணிப்பெண்கள் பணி புரியும் காலத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், கர்ப்பம் தரிக்கக் கூடாது என்றும் விதிகளை கடுமையாக்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனம் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில், திருமணம் செய்தவராக இருத்தல் கூடாது. வேலையில் சேர்ந்த பின் 5 வருடங்களுக்கு தனி நபராகவே இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும். கருத்தரிப்பது ஒப்பந்தத்தை மீறும் செயல். அப்படி மீறினால் நடவடிக்கைக்கு உள்ளாவர்” உள்ளிட்டவிதிமுறைகள் இதில் உள்ளன. இது குறித்து பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் விமர்சித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி 18 மாதங்கள் ஆனபின்பும், பெண்களுக்கு எதிரான விதிமுறைகளை கத்தார் ஏர்வேஸ் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அதன் விமானப் பணிப்பெண்கள் கடும் சிரமத்துக்கும் மன நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளனர். இதையடுத்து அந்நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பார்சிலோனா கால்பந்து சங்கத்தை சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரோசன் டிமிட்ரோவ், “பணிப்பெண்கள் தனியாக இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. இங்கே பணிபுரியும் பணிப்பெண்கள் பலர் திருமணமானவர்கள்” என்றார். இருப்பினும் அதன் தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பேகர், “நிறுவனத்தின் விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. பணி வேண்டி வரும்போது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை அவர்களிடம் வழங்கப்படுகிறது. அதைப் பார்த்துதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். பிறகு எப்படி விதிமுறைகளுக்கு எதிராக புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தபோதும், சர்வதேச அளவில் இந்த விவகாரம் விமானப் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமோ, கர்ப்பமோ கூடாது: கத்தார் ஏர்வேஸ் பணிப்பெண்களுக்கு கட்டுப்பாடு தீவிரம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari