புது தில்லி: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர திட்டமிட்டு வருகிறதாம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவிக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது. லஞ்சம் கொடுப்போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. லஞ்ச ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறுவதுபோல், லஞ்சம் பெறும் அதிகாரிகளை கையும்களவுமாகப் பிடிக்க தகுந்த ஆதாரங்களுடன் புகார் செய்யுங்கள் என்று கூறும் நிலையில், பொதுமக்கள் யாரேனும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் அவர்களுக்கும் சிறை தண்டனை கிடைக்க இந்த சட்டத் திருத்தம் மூலம் வாய்ப்புள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன், இதுபற்றி தற்போது எதுவும் கூற முடியாது. ஆனாலும், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை பொதுமக்கள் பதிவு செய்தால், அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கும்போது அதை ஆதாரமாக காண்பிக்க முடியும் என்றார்

