கனடா நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழ்ப் பெண்மணி நியமனம்

சென்னை:
கனடா நாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர், தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர்.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார்.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்தார். 1995-ம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை தொடங்கினார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றி பெற்றார்.

தேசிய கெனடியன் பார் அசோசியேசன் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் வள்ளியம்மை பணியாற்றி உள்ளார். மேலும் இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்தார்.

வக்கீல் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வியை வள்ளியம்மை பயிற்றுவித்தார். வானொலி, தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சமுதாய கலாசாரங்களை பற்றி தொடர் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். இவருடைய சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி இருக்கின்றன.