தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழகம், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.,30 இன்று உத்தரவு பிறப்பித்தார்.

புது தில்லி:

தமிழகம், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.,30 இன்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா ஆளுநராக இருந்து வரும் இவர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940, ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்தவர் பன்வாரி லால் புரோஹித். இவர் முன்னதாக அசாம் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். நாக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர் பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். 1991இல் பாஜக.,வில் இணைந்தார்.

1977ல் தீவிர அரசியலுக்கு வந்தவர். 1978ல் நாக்புர் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று சட்ட சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1980ல் மீண்டும் நாக்புர் தெற்கு தொகுதியில் இருந்து தேர்வாகி, அமைச்சர் ஆனவர்.

1984,1989ல் நாக்புர் எம்.பி.யாகவும், பாதுகாப்பு அமைச்சக நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். 1996ல் மீண்டும் மக்களவைக்கு தேர்வானவர்.

மகாத்மா காந்தியின் குரு, கோபால கிருஷ்ண கோகலேயால் நிறுவப்பட்ட ‘தி ஹிதவாதா’ நாளிதழை திறம்பட நடத்தியவர். இவரது தலைமையின் கீழ், தி ஹிந்துத்வா நாளிதழ், மத்திய இந்தியாவில் பெரும் புகழ் பெற்றது. நாக்புரில் இருந்த தலைமை அலுவலக பதிப்புடன், ஜபல்புர், ராய்புர், போபால் ஆகிய இடங்களில் பதிப்புகளைக் கொண்டு வந்தவர் பன்வாரிலால் புரோஹித்.

அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு புதிய துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பன்வாரிலால் புரோஹித்க்கு பதிலாக மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அசாம் மாநில ஆள்ளுநராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச ஆளுநராக பி.டி.மிஸ்ரா, பீஹார் மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: