ஹிந்துக்களுக்கு ஏமாற்றம்தான்! ஆனாலும் இந்த அரசியல் மாற்றம்… நன்மையை அளிக்கட்டும்!

இந்துக்கள் தம் மீது நிகழ்கின்ற தாக்குதல்களையும் பாதுகாப்பின்மையையும் புரிந்து கொண்டு பாதுகாப்பிற்காக இவ்வாறு ஓட்டளித்து வெற்றி அடையச் செய்திருக்கலாம்.

மாற்றம் நன்மையை அளிக்கட்டும்!!! நாட்டின் அரசாட்சிப் பொறுப்பை பிரதமராக ஏற்று 2014 ல் பதவிக்கு வந்ததும் தன் மத நூல் நம் நாட்டின் அரசியல் அமைப்பே என்று மோடி அவர்கள் கூறினார். அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தி ஊழலற்ற சுத்தமான பதவிக்கு தானே உதாரணமாகத் திகழ்ந்தார். சிறந்த அமைச்சர்களோடு பலவித பிரச்னைகளையும் திறம்பட எதிர்கொண்ட சாமர்த்தியத்தை நாடே கவனித்து வந்தது.

1.ஊழலற்ற அரசாட்சி. 2. நாட்டின் முன்னேற்றம். 3. நாட்டின் பாதுகாப்பு. 4. பகை நாடுகளுக்குச் சரியான பதிலடி கொடுத்த தைரியம். 5. குல, மத பேதமின்றி மக்களின் நலன் மீது அக்கறை செலுத்திய திறன். 6. சாமானியப் பிரஜைகளில் வளர்ச்சி…. போன்ற அம்சங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பார்த்தார்கள்.

ஆனால் அந்த தனித்துவத்தை வீழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு ஒன்று சேர்ந்த தேசிய வெறுப்புச் சக்திகளும் ஊழல் தலைவர்களும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பிரச்சாரம் செய்து அந்த கூச்சலில் தரக்குறைவாக ஹிந்து வெறுப்பில் ஈடுபட்டார்கள்.

ஓட்டு வங்கிகளாக பிற மதங்களை நோக்கி அவர்களைக் கொஞ்சிக் குலாவி அவர்களை திருப்திப்படுத்துவதற்காக ஹிந்து மதத்தை நிந்தித்ததோடு அரசமைத்திருந்த கட்சியை ஹிந்துத்துவா கட்சியாக சித்திரித்தார்கள்.

ஆனால் எதிர்பாராத வெற்றியைப் பார்த்து மலைத்துப் போய் ஹிந்துக்களின் ஓட்டு மூலமே மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்றும் இனிமேல் பிற மதத்தவருக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் பிரிவினைவாத அரசாட்சி தொடங்கி விடும் என்றும் பொய்யுரைத்து, எழுதி, கூவி, சர்வதேச ஊடகங்களில் கூட பிரச்சாரம் செய்தார்கள்.

குடியரசு நாட்டில் குடியரசாட்சியை மதிக்காத, குடியாட்சிக்கு எதிரான சக்திகளாக தன்மை முன்னிறுத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்துக்கள் தம் மீது நிகழ்கின்ற தாக்குதல்களையும் பாதுகாப்பின்மையையும் புரிந்து கொண்டு பாதுகாப்பிற்காக இவ்வாறு ஓட்டளித்து வெற்றி அடையச் செய்திருக்கலாம். ஆனால் இந்த வெற்றி அனைத்து மதத்தவரும் குலத்தவரும் சேர்ந்து அளித்த வெற்றியே!

இன்னும் சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரத்திலிருந்த அரசாங்கத்தால் ஹிந்து மதத்திற்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. அயோத்தியா முதற் கொண்டு அனைத்து பிரச்னைகளும் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

முக்கியமாக சபரிமலை மேல் மாநில அரசு செய்த அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஹிந்து போராட்டத்திற்கு மத்திய அரசு எதிர்வினை ஆற்ற வில்லை. அதன் பலனை அங்கு ருசி பார்க்க வேண்டி வந்தது.

ஆனால் மத்தியில் அரசு செலுத்தும் கட்சி பாரத தேச நலனில் அக்கறை கொண்டது. அதனை மதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது விவேகமல்ல! நம் நாட்டின் கலாச்சாரமும், பாரம்பரியமும் இந்த தேசத்தின் மக்களனைவருக்கும் சொந்தம். அவற்றோடு நம் நாட்டில் பிறந்த ஹிந்து பரம்பரையினர் இணைந்திருப்பது இயல்பு! அதோடு கலாச்சாரத்தையும் தேசிய உணர்வையும் மதமாக சித்திரிப்பது விவேகமற்ற செயல்!

பிற மதங்களையும் மதித்து, அவர்களின் ஆதரவையும் நிறைவாகக் கொண்ட ஹிந்துத்துவம், மக்கள் அனைவரின் நலனையும், ஒன்று கூடி வாழ்வதையும் இயல்பாகக் கோருகிறது. அதனை புரிந்து கொண்ட நல்லுள்ளம் கொண்ட பிற மதத்தவர்களும் நம் நாட்டில் உள்ளார்கள். அவர்களின் மதங்கள் ஆளும் நாடுகளை விட நம் நாட்டில் நலமாகவும் பாதுகாப்பாகவும் சமமான முக்கியத்துவத்தையும் பெற்று நிம்மதியாக வாழ முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

நாட்டு முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நடந்து வரும் அரசு என்பதால் நிலையானதும் பாதுகாப்பானதுமான நலம் இருக்கும் என்பதை ஐந்து ஆண்டுகால அனுபவத்தில் மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் குலப் பிடிவாதம், தேசிய வெறுப்பு எண்ணங்கள், கட்சிகளுக்கு விலை போகும் குணம்… போன்றவை பாளமாகப் படிந்து போன சில ஊடகங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் ஒவ்வொரு கணமும் அரசாங்கத்தை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தன. தாங்கள் பஜனை செய்யும் தலைவனை வழிபட்டுக் கொண்டு அந்த மயக்கத்தில் பகை நாட்டு தலைவர்களின் வார்த்தைகளைக் கூட உயர்வாக குறிப்பிட்டு உண்மைகளை மூடி மறைத்தன.

சர்வதேச பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் நம்நாடு சாதித்த வெற்றியைக் கூட வேறு நாட்டிற்குத் தாரை வார்க்க முயற்சித்தார்கள். அதிகார தாகத்தால் ஒரு தலைவரை கீழிறக்கும் பேராசையால் நாட்டின் மரியாதையைத் தகர்ப்பதற்கும் பின் வாங்கவில்லை.

தாங்கள் கௌரவிக்க விரும்பிய தலைவரின் பிதற்றல்கள், பைத்தியக்கார ஊர் சுற்றல்கள் இவற்றையே மேடைகளில் முழக்கங்களாக போற்றிப் புகழ்ந்தார்களே தவிர நாட்டின் வெற்றியை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொண்டிருந்தால் எதிர் போட்டியாளரான தலைவருக்கு புகழ் வளர்ந்துவிடும் என்று எண்ணினார்களே தவிர நாட்டின் கீர்த்தியைப் பற்றி கவலை கொள்ளவில்லை.

ஆனால் அவர்களின் கோணங்கி சேட்டைகள் பலிக்காமல் போனதை சிறந்த பாடமாக அவர்கள் ஏற்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக நடக்கும் அரசின் செயலையும் முடிவுகளையும் கவனிக்கும் முயற்சியில் இறங்கினால் அவர்கள் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொண்டவர்களாவார்கள்.

அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட புது அரசாங்கமும் மத்தியில் மீண்டும் அரசாங்கத்திற்கு வந்த அரசும் மத வேறுபாடு பார்க்காமல் ஓட்டு வங்கி அரசியலின் வழிக்கு போகாமல் இருக்குமாக!

மதமாற்றம் என்னும் தொற்று நோய் பரவுதலுக்கு அதிகாரத்தையும் மனிதர்களையும் பயன்படுத்தும் கீழான புத்தி ஏற்படாதிருக்குமாக!

ஹிந்து மக்கள் கவனத்தோடு ஆலயங்களுக்கும் தர்மத்திற்கும் ஆபத்து நேர விடாமல் ஜாக்கிரதையாக இருப்பார்களாக!

தலைவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக, அவர்களின் தரப்பில் யாகங்கள் நடத்திய பெரியவர்கள், மதமாற்றங்களின் கீழ்மையான தந்திரங்களை நிகழ்த்த விடாமலும் ஊழல் மலியவிடாமலும் தகுந்த விதத்தில் எச்சரிப்பார்களாக!

நாடு பத்திரமாகவும், தர்மம் க்ஷேமமாகவும், சமரசம் கருத்தொற்றுமையுடனும், ஊழலற்ற ஆட்சி நிலவட்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்!
சுபம் !!!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
ருஷிபீடம் – மாத இதழ் ஜூலை, 2019 தலையங்கத்தின் தமிழ் வடிவம்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...