இணையத்தில் வெளியானது 2.0: தடை இருந்தும் தடையின்றி வெளியானது!

இணையதளத்தில் வெளியானது 2.0. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தப் படம் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படங்களை ஆன்லைனில் வெளியிட்டு சினிமா உலகத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2.0 படத்தை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. படம் வெளியான 10 மணி நேரத்தில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக வீம்புக்கு என்றே ஒவ்வொரு படத்தையும் சவால் விட்டு இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர் தமிழ் ராக்கர்ஸ் குழு. அந்த வரிசையில் 2.0 படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸை ஒழிப்போம் என தமிழ் திரையுலகம் சபதம் ஏற்று  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் எந்தப் பயனும் விளையவில்லை. படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன.

முன்னதாக, சர்க்கார் படத்தை ஒட்டி வெளியான சர்ச்சைகளின் போது, டிவிட்டர் வலைத்தளத்தில் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் கூறியதாக செய்தி வெளியானது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ் ராக்கர்கஸ் குழு,   அது தங்களது அதிகார பூர்வ டிவிட்டர் பக்கம் இல்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் சென்று, இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை பெற்று வந்தும், 2.0 படம் இணையதளத்தில் வெளியிடப் பட்டது, அதிர்ச்சி அளிக்கும் செய்திதான்!