![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2023/03/cellphone-in-hall.jpg?resize=696%2C392&ssl=1)
தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை விதித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் 14-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
ஏப்ரல் 20 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்வு அறைக்குள் ஆசிரியர்களும் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.