December 6, 2021, 7:37 pm
More

  கார்த்திகையில் கார்த்திகை… திருமங்கை ஆழ்வாரின் திருநட்சத்திர தினத்தில்… !

  thirumangaialwar - 1

  நீலன்; கள்ளர் குலத்தவர். சோழப் பேரரசின் தளபதி. இவர் திருவாலி எனும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலிநாட்டு பெரியநீலன் என்ற படைத் தளபதிக்கும் வல்லித்திரு எனும் மங்கைக்கும் மகனாகப் பிறந்தவர்.

  போரில் எதிரிகளைக் கலங்கடித்து வெற்றிகளைக் குவித்ததால், சோழமன்னன் அவரை திருமங்கை நாட்டுக்கு சிற்றரசன் ஆக்கினான். வீர இளைஞனாகத் திகழ்ந்தார் நீலன். ஒருமுறை… திருவெள்ளக்குளம் ஊரிலுள்ள ஸ்ரீநிவாஸர் கோவிலில் வைத்து, குமுதவல்லி எனும் மங்கையை சந்திக்கிறார். அவள், கபிலமுனியின் சாபத்தினால் மானுட வாழ்வு எடுத்த தேவமகள். அழகு என்ற சொல்லுக்கே இலக்கணமானவள். மகா ஞானி. அவளைப் பார்த்த மாத்திரத்தில் தன் மனதைப் பறிகொடுக்கிறார் நீலன். அவளிடம் தன் விருப்பத்தைக் கூற, அதற்கு குமுதவல்லி இரண்டு கட்டளையிடுகின்றார்.

  1) பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும் சடங்கினைச் செய்து கொண்டு, திருமாலின் அடியவனாக மாற வேண்டும்.

  2) திருமால் அடியார்களுக்கு, தினமும் அன்னதானம் செய்ய வேண்டும்.

  குமுதவல்லியின் மீது இருந்த ஆசையினால், நீலனும் சரி என்று சொல்லி விடுகிறார். சரி…. பஞ்ச சம்ஸ்காரம் என்ற அந்தச் சடங்கை யாரிடம் செய்து கொள்வது? நல்ல குரு ஒருவரிடம் பணிந்து, அவரை ஆச்சார்யராக அடைந்து, அவர் மூலமாக அன்றோ அந்தச் சடங்கை மேற்கொள்ள வேண்டும்..? நீலனோ எப்போதும் உயர்ந்த விஷயத்தையே நாடுபவராயிற்றே! அவருக்கு அன்று திருநறையூர் ஸ்ரீநிவாஸப் பெருமாளே மனத்தில் நிறைந்திருந்தார். எனவே அவரையே தேர்ந்தெடுத்தார்… தனக்கு குருவாக!

  நேரே, கோவிலுக்குச் சென்றார். தன் விருப்பத்தை அர்ச்சகரிடம் சொன்னார். மன்னன் நீலனின் விருப்பத்தைக் கேட்ட கோயில் அர்ச்சகர், என்ன செய்வது என்று தெரியாமல், சந்நிதி திரையைப் போட்டு, அவரை சந்நிதியில் விட்டுவிட்டு வெளியேறினார்.
  பெருமாளின் முன்னே, பிடிவாதமாக நின்றார் நீலன். அவர்தான் தமக்கு அந்தச் சடங்கைச் செய்ய வேண்டும் என்று கண்மூடி, அசையாமல் அவரையே தியானித்தார். சிறிது நேரம்தான் என்றாலும் கடுமையான தவம் அது.

  மெய்யுருகி நின்றால், வெண்ணை உண்டவாயன் தான் உருக மாட்டானோ?! ஸ்ரீநிவாஸ பெருமாளின் சக்கரக் கையும் சங்கக் கையும் நீலனின் புஜங்களைத் தீண்டியது. நெற்றியில் ஊர்த்வபுண்டரம் இட்டது (அதாவது, கீழிருந்து மேலாக திருநாமம் இடுவது). பரகாலன் என்று பெயரிட்டு அழைத்தது பெருமாளின் குரல். அதுவே, திருமந்திரத்தையும் உபதேசித்தது. அந்த அளவில், நீலனின் முகக் களை மாறியது. முகம் பொலிவுற்றது.

  அதன் பிறகு… வேறென்ன?! பரகாலர் என்ற நீலருக்கு குமுதவல்லியுடன் திருமணம் இனிதே நடந்தது. அதைத் தொடர்ந்து அன்னதானம் ஆலிநாட்டின் சிறப்பம்சம் ஆனது. ஆலிநாடே அதிசயப் பட்டது. மன்னன் பரகாலனின் புகழ் எட்டு திசைகளிலும் பரவியது.
  இப்படி, திருமால் அடியார்களுடன் திளைத்த சிற்றரசன் பரகாலன், சோழ மன்னனுக்கு கப்பம் கட்டுவதை மறந்தான். அன்னதானத்துக்கே அனைத்து செல்வமும் செலவானது.

  ஆனால், பரகாலனின் வீரத்தை நன்கு அறிந்த சோழமன்னன், பரகாலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்பதால், பரகாலனை தந்திரமாக அழைத்து ஒரு கோவிலில் சிறை வைத்தான். மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த பரகாலனின் கனவில் அத்திகிரி அருளாளனான காஞ்சிப் பெருமாள் வரதராஜர் தோன்றினார்.

  பரகாலரை காஞ்சிக்கு வருமாறு சொன்னார். வந்தால், அவர் பட்டிருக்கும் கடனைத் தீர்ப்பதாக அறிவித்தார்.

  வரதராஜ பெருமாளின் ஆணையை அரசுக்குத் தெரிவித்தார் பரகாலன். பரகாலன் சத்தியம் தவறாதவர் என்பதை நன்கு உணர்ந்த அரசன், ஒரு சிறு குழுவை அவரோடு காஞ்சிக்கு அனுப்பி வைத்தார். அங்கே, மீண்டும் பரகாலன் கனவில் தோன்றிய காஞ்சி வரதன், புதையல் இருக்கும் இடத்தை காண்பித்துக் கொடுத்தார்.

  அதன்படி, வேகவதி ஆற்றின் கரையில் தோண்டினார் பரகாலன். பெரும் புதையலைக் கண்டெடுத்தார். அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை செலுத்தினார். மீதம் இருந்ததை அன்னதானத்துக்கு எடுத்து வைத்தார். அடுத்து, திருமங்கை நாட்டின் விளைச்சலில், பேரரசுக்குச் சேர வேண்டிய நெல்லினைக் கேட்டனர், சோழ மன்னனின் அதிகாரிகள். பரகாலரோ, காஞ்சிப் பேரருளாளனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டபடியே, உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார்.

  என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல் துகள் அனைத்தும் நெல்மணிகளாயின! பரகாலனின் பெருமையை, தெய்வம் அவருக்குத் துணை நின்றதை அறிந்த அரசன், தன் தவறுக்கு வருந்தினான். அவர் திருமங்கை நாட்டை சுதந்திரமாக ஆள்வதற்கு வழிவிட்டான்.

  குமுதவல்லிக்காக வைணவக் கோலம் பூண்ட நீலன், பரகாலராக மாறிய பின்னே, மனப் பூர்வமாக வைணவன் ஆனார். பெருமாள் நடத்திய திருவிளையாடல்களால், பெருமாளின் மீதான பற்று இன்னும் வலுப்பெற்றது, பரகாலருக்கு!

  அன்னதானத்தால், ஆலிநாட்டின் பொருளாதாரம் வலுவிழந்தது. வேறு வழியின்றி, வளம் உள்ளவரிடத்தில் கொள்ளை அடித்தாவது இந்தத் திருப்பணியைச் செய்யத் துணிந்தார் பரகாலன். விளைவு& வழிப்பறிக் கொள்ளையனாக மாறினார்.

  அரங்கன், இவரை திருத்திப் பணி கொள்ள எண்ணினான். அந்த நாளும் வந்தது. அழகிய மணவாளனும் தாயாரும் புதுமணத் தம்பதியராக மாறி, பரகாலர் கொள்ளையடிக்கும் திசையில் வந்தனர். அப்போது, இவர்களின் ஆபரணங்கள் அனைத்தையும் கொள்ளையடித்த பரகாலனால், நம்பெருமாளின் கால்விரலில் அணிந்திருந்த விரலணியைக் கழற்ற இயலவில்லை.

  அதை, பல்லால் கடித்தாவது கழற்ற முயல்கிறார் பரகாலர். பகவானின் பாதத்தைத் தீண்டிய வேகத்தில், உண்மைப் பொருளை உணர்கிறார். மாயம் புரிந்த நம்பெருமாள், மீண்டும் திருமந்திரத்தை உபதேசித்து, பேரொளியாக மறைகின்றான். அவ்வளவுதான்! கவி பிறக்கின்றது அந்தக் கள்வருக்கு!

  பொய் வண்ணன் மனத்து அகற்றி புலன் ஐந்தும்
  செல வைத்து
  மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்
  நின்ற வித்தகனை
  மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண
  மரகதத்தின்
  அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்
  அரங்கத்தே

  திருமங்கை மன்னன் அதுமுதல், திருமங்கை ஆழ்வார் ஆனார்.

  திருமங்கையாழ்வார் மிகப் பெரும் பாக்கியசாலி! மற்றவர்களுக்கு குரு என்று ஒருவர் இருந்து பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும் ஐவகைச் சடங்கினைச் செய்வர். ஆனால், பகவானாலேயே இந்த ஐவகைச் சடங்கு செய்யப்பட்ட ஒரே வைணவர் இவர்தான்!
  ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திருமங்கையாழ்வார் செய்த கைங்கர்யங்கள், திருப்பணிகள் கணக்கிலடங்காதவை!

  ஆனால், இந்தத் திருப்பணிகளை நிறைவேற்ற இவர் கையாண்ட முறைதான் சற்று வித்தியாசமானது! இவர், இறைவனின் திருப்பணிக்காக எதை வேண்டுமானாலும் துணிவுடன் செய்வார். இவர் செய்த திருப்பணிகளுக்கு சாட்சியாக இன்றும் இருப்பவை, இவரால் கட்டப்பட்ட மதில்களும், விமானம்& மண்டபங்கள்& கோபுரங்கள்தான்!

  திருவரங்கக் கோயிலின் நான்காவது பிராகாரம் இவர் பெயரால், ஆலிநாடன் திருச்சுற்று என்றே வழங்கப்படுகிறது. இது, இன்றும் திருமங்கை மன்னனின் திருப்பணியை நினைவுகூரும் வண்ணம் அமைந்துள்ளது.

  கோயில் திருப்பணிக்கு நிதி இல்லை. எங்கே செல்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது, நாகப்பட்டினத்துக்கு அருகே ஒரு இடத்தில், தங்கத்தால் ஆன பெரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது என்றும், அதை எடுத்து வந்தால், திருப்பணி நிறைவு பெறும் என்றும் ஒருவர் சொல்லக் கேட்டார் திருமங்கை மன்னன். எளிதில் திருடவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு மிகுந்த இடம். அதை தானே கொள்ளையடித்து வர திட்டமிடுகிறார் திருமங்கை மன்னன்.

  பணியாளர்கள் புடைசூழச் சென்றார். சாமர்த்தியமாக அந்தச் சிலையைக் கவர்ந்தார். அதை எடுத்துக் கொண்டு, தன் பரிவாரங்களுடன் திருவரங்கம் திரும்ப முயலும்போது, வழியில் ஒரு சிறு கப்பல் தென்படுகிறது. அந்தக் கப்பல் முதலாளியிடம் பொய் வழக்காடி, அங்கிருந்தும் பெரும் பொருள் பெற்றார். இவை அனைத்தும் கொண்டு திருப்பணி செய்தும், ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.

  பணியில் ஈடுபட்டவர்கள், கூலி கேட்டு திருமங்கை மன்னனைத் துளைத்தெடுக்க, செய்வதறியாது திகைத்தார். நிலைமையை சமாளிக்க தன் இயல்பின்படி ஒரு செயலைச் செய்யத் துணிந்தார். அதன்படி, பணியாளர்கள் அனைவரையும் ஓர் ஓடத்தில் ஏற்றி, கொள்ளிடத்தில் இறங்கினார்.

  ஆற்றின் மறுகரையில் இறங்கியதும் நிதி உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லி, நடு ஆற்றில் ஓடத்தைக் கவிழ்த்தார். அவர்களிடம் கடன்பட்ட இவர், அவர்களின் பிறவிக் கடனைத் தீர்த்தார் இப்படி.

  மறுகரையில் இறங்கிய திருமங்கை மன்னனை அவரவர்களின் உறவினர்கள் மடக்கினர். பணியாளர்கள் எங்கே என்று கேட்டு இவரைத் துளைத்தெடுத்தனர். அவர்கள் பிறகு வருவார்கள் என்று கூறிச் சென்றார். இவரது மனவருத்தத்தைத் தீர்க்க, அன்று இரவு, இவரது கனவில் அரங்கன் வந்தான்.

  அவர்கள் அனைவரும் காவேரி ஸ்நானம் செய்த பிறகு, அழகிய மணவாளன் திருமண்டபத்திலே நின்று, அவரவரின் உறவினர் பெயரைக் கூப்பிட்டு, காத்திருக்கச் சொல் என்று சொல்லி மறைந்தார்.

  அரங்கனின் சொல் கேட்ட திருமங்கை ஆழ்வாரும், அப்படியே ஏற்பாடு செய்தார். மாண்டோ ர் அனைவரும் மீண்டனர். அவர்கள் அனைவரும் அவர்களின் உறவினர்களிடத்தில், ஆழ்வாரின் கருணையால், நாங்கள் பெரியபெருமாளின் திருவடிகளை அடைந்தோம்! நீங்கள் ஆழ்வார் திருவடிகளில் அபசாரப்படாதீர்கள். சில காலம் இந்த சம்ஸார வாழ்க்கையைக் கழித்துவிட்டு, ஆழ்வார் திருவடிகளை சரண் அடைந்து, உய்வு பெறுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து, மீண்டார்கள்.

  1 COMMENT

  1. தொடர்ந்து வெவ்வேறு இலக்கியக் கட்டுரைகள் வெளியிடுமாறு வேண்டுகிறேன். நன்றி
   — கவிஞர். தில்லைவேந்தன்

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,802FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-