தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் அளித்தது. செய்முறை தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது என்று தகவல் அளித்தது தமிழக அரசு.

தற்காலிக ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர்களும் பின்னர் நீதிமன்றம் வருவார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது அதிருப்தியை வெளியிட்டது.

தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கு பதில், போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களை அழைத்துப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கலாமே என்று அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை யோசனை தெரிவித்தது.

இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்தால் தற்போதைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

அறவழியில் போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும், போராட்டத்தை தீவிரமாக்கும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றும் குறிப்பிட்ட ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேசி மாணவர்களுக்கு கல்வி வழங்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடனடியாக ஜாக்டோஜியோ அமைப்பை அழைத்துப் பேசி போராட்டத்தை சுமூக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் விவகாரத்தில் இனியும் காலதாமதம் இன்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

இவை எல்லாம் சாதாரணமான, வழக்கமான, ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடும் அம்சங்கள்தான். ஆனால், ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் அவருக்கே பூமராங்க் போல் திருப்பித் தாக்கும் ஆயுதம் ஆகியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதிமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் நிச்சயம் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, இப்போது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஏற்கெனவே, திமுக.,தான் ஆசிரியர்கள் போராட்டத்தின் பின்னணியில் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதையும் வலுவாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அதனை மெய்யாக்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

தங்களுக்கு எந்த விதத்திலும் சரியாக பணிகள் நடக்காமல், எல்லாவற்றுக்கும் இழுத்தடித்துக் கொண்டு, சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள் அரசு ஊழியர்கள் என்ற கருத்து பொதுமக்களிடம் வேரூன்றி இருக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு, வீடு நகை பணம் நிறைய வைத்துக் கொண்டு, கந்துவட்டிக் கொடுப்பவர்கள் என்ற கருத்தும் பொதுமக்களிடம் உருவாகியிருக்கிறது.

இப்போது ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு துளியும் இல்லை. அவர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கருதுகிறார்கள். அதற்கு ஏற்றார்ப் போல் கஜானா கணக்கு சொல்லி முதல்வர் எடப்பாடி கொடுத்த கருத்துகள் பெருமளவில் போய்ச் சேர்ந்திருக்கின்றன. அரசின் வரிவருவாயில் மிகப் பெரும் பகுதியை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுமே பெற்றுக் கொண்டுவிடுவதால், மக்கள் நலத் திட்டங்களோ வசதிகளோ செயல்படுத்த படுவதில்லை என்ற எண்ணம் மக்களிடம் வலுவாகியிருக்கிறது.

தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வசதிகளை அரசு ஊழியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற சமூகப் பிளவுக் கருத்தோட்டம் பொதுமக்களிடம் வேரூன்றி இருப்பதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பினை பயன்படுத்தி, சாட்டையைச் சுற்றி அரசியல் சிக்ஸர் அடிக்கலாமா என்று யோசிக்கிறார் எடப்பாடியார்.

அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வளைத்துப் போட்டால் அவர்களை வைத்தே தேர்தலில் பழைய தில்லுமுல்லுகளைச் செய்து கரையேறி விடலாம் என்ற பழைய கருணாநிதி கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அதனாலேயே வாக்குறுதிகளை வழக்கம் போல் அள்ளி விடுகிறார்.

ஆனால், இருவருக்குமே இந்த விவகாரம் கூர் முனைக் கத்தியில் நடப்பது போன்றதுதான்.

எடப்பாடிக்கு சாட்டையடி தவறிப் போனால், நிர்வாகத்தில் அரசு ஊழியர்கள் பெரும் குடைச்சல் கொடுக்கத் தொடங்குவார்கள். அரசு ஊழியர்களும் சேர்ந்து ஒரு புதுவித தலைவலியாக எடப்பாடிக்கு மாறும். மேலும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களால் தமக்கு தோல்வி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப் படும் நிலையில் எடப்பாடி இல்லை.

ஆனால், திமுக வந்தால் மறுபடியும் அரசு ஊழியர்களுக்குத்தான் வாரிக் கொடுப்பார்கள் என்ற எண்ணம், பொதுமக்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வெகுஜனக் கருத்து வலுவாகிவிட்டால், ஸ்டாலின் ஓட்டுக்களைப் பெறுவது பெரும் கஷ்டம்தான்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.