
ஒரு வாரத்துக்கு முன்னர் 77 வயதான பெரியவர் ஒருவர் தனக்கு, நான் எழுதி சூரியன் பதிப்பகம் மூலம் அண்மையில் வெளிவந்துள்ள ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ புத்தகத்தை அனுப்ப இயலுமா என கேட்டிருந்தார். நானும் அந்தப் பதிப்பகம் மூலம் அனுப்பி வைத்திருந்தேன்.
அடுத்த நாள் எனக்கு இரண்டு புத்தகங்கள் கொரியரில் வந்தது. உடனே நான் போன் செய்து ‘புத்தகம் கிடைக்கப் பெற்றேன். எதற்காக நீங்கள் செலவு செய்து புத்தகங்கள் அனுப்பி வைத்துள்ளீர்கள்…’ என்று உண்மையான கரிசனத்துடன் கேட்ட போது அதில் என்னைப் பற்றிய கேடலாக் ஒன்று வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா என கேட்டார்.
அப்போது இரவு மணி 8.30.
‘பார்க்கிறேன் சார்… இப்போதுதான் நான் ஆஃபீஸில் இருந்து வீட்டுக்கு வந்தேன்….’ என்றேன்.
அப்போதுதான் கவனித்தேன். அவர் அனுப்பிய இரண்டு புத்தகங்களும் அவர் எழுதியவை. புனைப்பெயர் வையவன். அவர் ஒரு எழுத்தாளர் என எனக்குச் சொல்லவே இல்லை.
மிக ஆர்வத்துடன் அவர் அனுப்பி இருந்த கேடலாகைப் பார்த்தேன். 1939 ஆம் ஆண்டு பிறந்து பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து 150 புத்தகங்களுக்கு மேல் தன் சொந்த பதிப்பகம் மூலம் வெளியிட்டு தானும் கல்கி, விகடன் போன்ற பத்திரிகைகளில் கதைகள் எழுதி…. ஒரு மகனை டாக்டருக்கும், ஒரு மகளை இளங்கலை படிப்பும் படிக்க வைத்துள்ளார்.
எவ்வளவு பெரிய சாதனை…
திரும்பவும் நான் அவருக்கு போன் செய்து ‘உங்கள் உழைப்பும் சாதனையும் பிரமிக்க வைக்கிறது…’ என சொல்லி பெருமைப்பட்டேன். அப்போது அவர் சொன்னார்… ‘மேடம், என்னிடம் உள்ள புத்தகங்களை எல்லாம் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன். நீங்கள் அவற்றை இ-புக்காக மாற்றி விற்பனை செய்ய முடியுமா? அப்படி இல்லை என்றாலும் அவை உங்களைப் போன்று படிப்பார்வம் உள்ளவர்களுக்குப் பயன்படட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்… யாருமே படிக்காமல் வீணாவதற்கு பதில் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்காவது பயன்படட்டும்….’ என்றார்.
அப்போது நான் சொன்னேன். ‘இப்போதெல்லாம் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் சின்ன சின்ன பத்திகளில் வரும் செய்திகளையும், தகவல்களையும் படிப்பதிலேயே நம் மக்களின் படிக்கும் தாகம் தீர்ந்துவிடுகிறது. அதிலேயே அவர்கள் திருப்தி அடைந்துவிடுவதால் புத்தகம் வாங்கும் ஆர்வமும், படிக்கும் ஆர்வமும் பெருமளவு குறைந்துவிட்டது…’
உடனே அவர் பாயிண்ட்டைப் பிடித்தார்.
‘இப்போ நீங்க கொரியர் கிடைத்ததை சொல்வதற்கு போன் செய்தீர்கள் அல்லவா? இந்த சிறிய செயலில் உங்கள் பண்பு வெளிப்படுகிறது… ஆனால் இன்றைய தலைமுறை மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோர்களின் தலைமுறையும் சின்ன சின்ன எதிக்ஸ், மாரல் போன்றவற்றுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. நன்றி சொல்வதற்கும், அன்பு காட்டுவதற்கும், சாரி சொல்வதற்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எல்லாமே பெரிய பெரிய ஆசை… விலையுயர்ந்த கார், பிறர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு பளபளக்கும் வீடு, காசை வைத்து என்ன செய்வது என்று தெரியாத அளவுக்கு சம்பளம்… கிடைக்கின்ற கேப்பில் பெறுகின்ற புகழ் இவற்றில் மட்டும் பெரிய பெரிய ஆசை…’ என ஒரு போடு போட்டார் பாருங்கள். என்னுள் சதா ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகள் அவருடன் ஒத்துப் போனதை நினைத்து அதிசயித்தேன்.
‘எப்படி சார் நீங்களே செலவு செய்து புத்தகங்கள் பிரசுரம் செய்தீர்கள். அதுவும் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இரண்டு குழந்தைகளை படிக்க வைத்து…. மனைவி ஒன்றும் சொல்ல மாட்டாரா?’ என கேட்டதற்கு
‘என் மனைவி சொக்க தங்கம்…. அவருடைய நகைகளை அடகு வைத்து பணம் புரட்டி புத்தகம் வெளியிட்டு விற்று திரும்பவும் நகைகளை அடகு வைத்து பணம் புரட்டி… இப்படித்தான் நான் புத்தகங்கள் பதிப்பித்து வந்தேன்…’ என்றார்.
‘ஏன் சார் இப்போ பத்திரிகைகளில் எழுதுவதில்லை’ என்றேன்.
‘வயதானவர்களை யாரம்மா மதிக்கிறார்கள்… ஒதுங்கி விட்டேன்…’ என்ற போது அவருடைய சாதனைகளையும் மீறிய சோகம் வெளிப்பட்டது.
எழுத்து, புத்தகங்கள், பதிப்பகம், வாசிப்பு…?
– காம்கேர் கே. புவனேஸ்வரி
கட்டுரையாளர் குறித்து…

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/



