
9.எமலோகம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“யமம் ராஜானாம் ஹவிஷா ஸபர்யத”
— அதர்வண வேதம்
“யமராஜாவை ஹவிசால் உபசரியுங்கள்!”
இதே மந்திரம் தைத்திரீய (யஜுர்வேத) ஆரண்யகத்திலும் உள்ளது.
அண்மையில் ஒரு சமஸ்கிருத பண்டிதர் நவீன தோரணையில் நம் சனாதன தர்மத்தை விளக்க முற்பட்டார். சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் எல்லாம் வெறும் பிரமை என்றும் உபநிஷத்திலும் வேதத்திலும் எமலோகம் போன்றவை பற்றி கூறப்படவில்லை என்றும் கருடபுராணம் போன்றவை எல்லாம் வெறும் கற்பனைகளே என்றும் பேசினார். அதோடு கூட ஆங்கில மொழியில் இது குறித்துக் கட்டுரைகள் எழுதினார்.
நன் சனாதன தர்மத்தின் மீது கௌரவத்தைக் காட்டுவதுபோல் நடந்து கொண்டு, தனக்குப் புரியாத விஷயங்களை ஆதாரமமற்றவை என்று அவர் கண்டிப்பது வருத்தமான விஷயம். அது போகட்டும்.
உபநிஷத்துக்களில் நசிகேதனுக்கு பிரம்ம வித்யையை போதித்த எமதர்மராஜன் தன் யம லோகத்திலேயே நசிகேதனுக்கு உபதேசித்த விவரம் பற்றி கூறப்பட்டுள்ளது.
கடோபநிஷத்திலேயே ‘தர்ம விரோதிகளையும் நியமத்தைக் கடைபிடிக்காதவர்களையும் என்னிடம் வரவழைத்து தண்டிப்பேன் என்று கூறும் வாக்கியங்கள் உள்ளன.
தெளிவாக மேற்சொன்ன வேத வாக்கியத்திலும் இதே கருத்து உள்ளது. இந்த வாக்கியம் உள்ள முழு மந்திரமும் இதோ…
பரேயுவாம்சம் ப்ரவதோ மஹீரிதி
பஹூப்ய: பந்தாமனுப ஸ்பசானம் |
வைவஸ்வதம் சங்கமனம் ஜனானாம்
யமம் ராஜானம் ஹவிஷா சபர்யத ||
“இந்த பூமியிலிருந்து மிகப்பெரும் தொலைவிலுள்ள எம லோகத்திற்கும், பித்ரு லோககத்திற்கும் (கர்ம பலனை அனுபவிக்கும் இடங்களுக்கு) பயணித்தவர்களின் வழி தெரியும். இறந்தவர்களுக்கு அவரே சென்றடையும் இடம். அப்படிப்பட்ட யம ராஜாவை யக்ஞ திரவியங்களால் பூஜியுங்கள்!” என்பதே இதன் பொருள்.
புராணங்களை வேதத்தின் துணை அங்கங்களாகப் பார்க்க வேண்டுமே தவிர எதிரானதாகவோ பின்னமானதாகவோ பார்க்கக்கூடாது.
“ஸ்வர்கே லோகே காமதுக் பவதி”
போன்ற பல வாக்கியங்கள் சொர்க்கம் போன்ற லோகங்கள் குறித்து தெரிவிக்கின்றன.
“பாவ புண்ணியப் பலன்கள் இந்த உலகத்திலேயே வேறொரு பிறவி எடுத்து அனுபவிக்கையில் வேறு சொர்க்கமும் நரகமும் எதற்காக?” என்ற கேள்வி கூட உள்ளது.
அதனைக் காரணங்களோடு புராணங்கள் விவரித்துள்ளன. செய்த வினைப் பயன்கள் சிலவற்றை சொர்க்கத்திலும் நரகத்திலும் அனுபவித்துவிட்டு மேலும் சிலவற்றை பூலோகத்தில் அதற்கேற்ற உடல்களில் பிறந்து அனுபவிப்பவர் என்றும் மேலுலகங்களில் அனுபவிக்க மட்டுமே முடியும்… பிராயச்சித்தம் போன்ற பரிகாரங்கள் சாத்தியமில்லை என்றும், பூலோகத்தில் அனுபவிப்பதோடு கூட பரிஷ்கார கர்மாக்கள் செய்வதற்கும் சாத்தியப்படுகிறது என்றும் மகரிஷிகள் விளக்கியுள்ளார்கள்.
வினைப்பயனின் கடுமையைப் பொருத்து அந்தத் தீவிரமான வினைப் பயன்களை மேலுலகில் அனுபவித்து விட்டு மீதி உள்ளவற்றை பிறவிகள் எடுத்து அனுபவிப்பர் என்று கூட தெளிவாக புராணங்கள் விவரிக்கின்றன.
புராணமும் இதிகாசமும் வேதம் கூறும் கருத்தை விஸ்தாரமாக கூறுகின்றனவே தவிர வேதத்தில் இல்லாத கருத்துக்களைக் கூறாது.
(தொடரும்)