
விநாயகர் நான்மணிமாலை – பகுதி 18
விளக்கம்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
பாடல் 21 – வெண்பா
கடமை தானேது கரிமுகனே வையத்
திடம்நீ யருள் செய்தாய் எங்கள் – உடைமைகளும்
இன்பங்களு மெல்லா மீந்தாய் நீ யாங்களுனக்
என்புரிவோம் கைமா றியம்பு.
பொருள் – ஆனை முகம் கொண்டவனே! இன்று எங்களிடத்தில் உள்ள உடைமைகள், சுற்றங்கள், சொந்தங்கள் அனைத்தையும் நீயல்லவோ தந்தாய். நாங்கள் உனக்கு என்ன கைம்மாறு செய்யக்கூடும் இயம்புவாயாக. எங்களது கடமைதான் எது என்பதைச் சொல்லுவாய் இந்த உலகத்திற்கு ஒரு நம்பிக்கையைத் தருகின்ற கணபதியே.
பாடல் 22 – கலித்துறை
இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும் எடுத்தவினை
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறு மேன்மைகளே.
பொருள் – பிரமலோகத்தின் முதல்வனாகிய கணபதியை, சூரியனைப் போன்ற பிரகாசமான முகத்தை உடைய ஆனைமுகனின் பரந்த புகழைப் பாடி நின்றால், நாம் மேன்மைகளைப் பெறுவோம். அந்த மேன்மைகள் என்னவெனில், நாம் இயம்புகின்ற அதாவது சொல்லுகின்ற வார்த்தைகள் எல்லாம் கணபதியின் புகழைச் சொல்லும் வேதங்கள் ஆகும்; நாம் செய்கின்ற செயல்கள் எல்லாம் வெற்றியடந்து அனைவருக்கும் பயனுடையதாக அமையும்; தேவர்கள் பகல் இரவு என்ற இரு பொழுதிலும் வந்து நமக்கு மேன்மையான பதவிகளைத் தருவர்.
(அயன்பதி – பிரம் இருக்கும் இடம்)
பாடம் ‘இயம்பு’ எனத் தொடங்கி ‘மேன்மைகளே’ என முடிகிறது,
பாடல் 23 – விருத்தம்
மேன்மைப் படுவாய் மனமே கேள் விண்ணி னிடிமுன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே, பயத்தா லேதும் பயனில்லை,
யான் முன்னுரைத்தேன் கோடிமுறை இன்னுங்கோடி முறைசொல்வேன்
ஆன்மாவான கணபதியின் அருளுண் டச்ச மில்லையே.
பொருள் – ஓ மனமே! மேன்மை அடைவதற்கான வழியைக் காண்பாயாக. விண்ணிலிருந்து இடி ஒன்று நம் முன்னே விழுந்தாலும் அதனைக் கண்டு அச்சமடையாதே. அச்சமுறுவதாலே பயன் ஏதும் இல்லை. இதனை நான் முன்னரே உரைத்தேன். இன்ன்மும் கோடி முறை வேண்டுமென்றாலும் இதனை நான் சொல்லுவேன். நம்முடைய ஆன்மாவைப் போன்ற கணபதியின் அருல் நமக்கு கிட்டுமானால் அச்சமெதற்கு. (எனவே அவன் அருலைப் பெற அவனைத் தொழுவாயாக.)
பாடல் ‘மேன்மை’ எனத் தொடங்கி ‘அச்சமில்லையே’ என முடிகிறது.
பாடல் 24 – அகவல்
அச்ச மில்லை, அமுங்குத லில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்; 5
யார்க்கு மஞ்சோம்,எதற்கு மஞ்சோம்;
எங்கு மஞ்சோம், எப்பொழுது மஞ்சோம்;
வான முண்டு மாரி யுண்டு,
ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும்
தீயு மண்ணுந் திங்களு மீன்களும் 10
உடலு மறிவு முயிரு முளவே;
தின்னப்பொருளுஞ் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டுங் காண நல்லுலகும்
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்று மிங்குளவாம்; சலித்திடாய், ஏழை 15
நெஞ்சே; வாழி, நேர்மையுடன் வாழி,
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ’
தஞ்ச முண்டு, சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.
பொருள் – நமக்கு இங்கே அச்சமெதுவும் இல்லை. எவருக்கும் அடங்கி நடக்கவேண்டிய அவசியம் இல்லை. யாரையும் கண்டு பயத்தால் நடுங்கத் தேவையில்லை; வெட்கத்தால் தலைகுனிந்து நிற்க அவசியமில்லை. பாவங்கள் எதனையும் செய்வதில்லை; அதனால் தண்டனைக்கு அஞ்சி பதுங்குவதும் இல்லை. என்ன நேர்ந்தாலும் துன்பமுற மாட்டோம்; இந்த பேரண்டமே வெடித்துச் சிதறுகின்ற இயற்கைப் பேரிடர் வந்தாலும் அஞ்சமாட்டோம்.
யார்க்கு மஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம். விரிந்து பரந்த வானமுள்ளது; அந்த வானத்திலிருந்து பெய்கின்ற மழையுள்ளது; சூரியன், நல்ல காற்று, நல்ல நீர், தீ, மன், நிலவு, விண்மீங்கள், நம்முடைய உடல், அறிவு, உயிர் ஆகியவை உள்ளன. உண்பதற்கு உணவும், இணைந்து வாழ வாழ்கைத்துணையும், கேட்டு மகிழ பாடல்களும், கண்டு மகிழ நல்ல உலகமும், மகிழ்வோடு வணங்கிட கணபதியின் பெயரும் எப்போதும் இங்கே உள்ளது.
எனவே நெஞ்சே சலிப்படையவேண்டாம். நீ வாழ்வாயாக; நேர்மையுடன் வாழ்வாயாக. நம் வாழ்விற்கு வஞ்சனை செய்யக்கூடிய கவலைக்கு இடம் கொடுக்காதே. செஞ்சுடர்த் தேவனாகிய விநாயகப் பெருமானின் திருவடி நாம் தஞ்சம் அடைவதற்கு உள்ளது. எனவே கவலை வேண்டாம் நெஞ்சே.
பாடல் ‘அச்சமில்லை’ எனத் தொடங்கி, ‘நமக்கு’ என முடிகிறது.
(தொடரும்)