மஹாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் தங்கி பணிபுரிந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி கொண்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்ட போதும், பலர் விரைவாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே செல்கின்றனர்.
இந்த கோர விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ம.பி.,யைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், இந்த லாக்டவுன் சூழலில் தங்களுக்கு வேலை போய்விட்டதால், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள், மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் இருந்து புஷாவலுக்கு சென்று கொண்டிருந்தனர். 157 கி.மீ., தொலைவு உள்ள இந்த இடங்களைக் கடந்து, அங்கிருந்து 850 கி.மீ., தொலைவு உள்ள மத்தியப் பிரதேசம், உமாரியா மற்றும் ஷாதுல் ஆகிய ஊர்களுக்குச் செல்ல முயன்றுள்ளனர்.
இதற்காக முதலில் சாலை வழியாகவும், பின்னர் ரயில்வே தண்டவாளத்தின் வழியாகவும் நடந்து சென்று ஊர்களுக்குச் செல்ல முயற்சி செய்துள்ளனர். வியாழக்கிழமை நேற்று மாலை 7 மணிக்கு கிளம்பி ஔரங்காபாத் நோக்கிச் செல்லும் பாதையில் 36 கி.மீ., தொலைவுக்கு நடந்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் களைப்புற்றதால் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனராம். தொடர்ந்து களைப்பு மிகுதியால் இரவு நேரத்தில் அவர்கள் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5: 15 மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவர்கள் படுத்திருந்த அந்த தண்டவாளத்தில் வந்துள்ளது. திடீரென்று தண்டவாளப் பாதையில் சிலர் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர், ஹாரன் எழுப்பியும், பிரேக் பிடித்தும் விபத்தைத் தவிர்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் இயலவில்லை.
தண்டவாளத்தில் படுத்திருந்த 14 பேர் மீது ரயில் ஏறியதில், அவர்கள் அங்கேயே உயிரிழந்தனர். தண்டவாளத்தை ஒட்டி அருகே இருவரும், தண்டவாளத்தில் இருந்து சற்று தொலைவில் 3 பேரும் படுத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த ரயில்வே மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்…
மஹாராஷ்டிரா, ஔரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்… என்று கூறியுள்ளார்.
தேசிய அளவில் கோவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 24 முதல் மகாராஷ்டிரம் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு நடுவே பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டு விட்டதால் வெளி மாநில தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.