ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
29ஆம் நாள் – இந்தியா vs இலங்கை
மும்பை – 02.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (357/8, சுப்மன் கில் 92, விராட் கோலி 88, ஷ்ரேயாஸ் ஐயர் 82, ரவீந்தர் ஜதேஜா 35*, மதுஷங்கா 5/80, சமீரா 1/71) இலங்கை அணியை (19.4 ஓவரில் 55, ஆஞ்சலோ மேத்யூஸ் 12, தீக்ஷணா 12*, ரஜிதா 14, ஷமி 5/18, சிராஜ் 3/16, பும்ரா 1/8, ஜதேஜா 1/4) 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஹித் பூஜ்யம் ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் இந்திய அணி அற்புதமான ஆட்டம் ஆடியது.
முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ரோஹித் ஷர்மா விக்கட்டை இழந்து 60 ரன் எடுத்தது. அடுத்த 11 முதல் 20 ஓவர்களில் விக்கட் இழக்காமல் மேலும் 60 ரன்கள். 21 முதல் 30 ஓவர்களில் ஷுப்மன் கில் (92 ரன், 92 பந்துகள், 11 ஃபோர், 2 சிக்சர்) விக்கட்டை இழந்து 73 ரன், 31 முதல் 40 ஓவர்களில் விராட் கோலி (88 ரன், 94 பந்துகள், 11 ஃபோர்), கே.எல். ராகுல் (19 பந்துகளில் 21 ரன்) ஆகியோரின் விக்கட்டுகளுடன் 71 ரன். 41 முதல் 50 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் (9 பந்துகளில் 12 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (56 பந்துகளில் 82, 3 ஃபோர், 6 சிக்சர்), ஷமி (2 ரன்), ஜதேஜா (24 பந்தில் 35 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரின் விக்கட்டுகளுடன் 93 ரன்.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கட் இழப்பிற்கு 357 ரன் எடுத்திருந்தது. இதில் கடைசி ஓவரில் இரண்டு விக்கட்டுகள்.
கடினமான இலக்கை அடைய இலங்கை ஆடவந்தபோது பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பதுன் நிசாங்கா ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் திமுத் கருணரத்னே ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சதீர சமரவிக்ரமா ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவர் முடிவில் இலங்கை அணி மூன்று விக்கட்டுகள் இழந்து 2 ரன்; அந்த இரண்டு ரன்னும் பும்ரா வீசிய வைட் பந்துகள்.
நாலாவது ஓவர் முதல் பந்தில் சிராஜ் வீசிய முதல் பந்தில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். பத்தாவது ஓவரை வீச ஷமி வந்தார். அவரது ஓவரின் மூன்றாவது பந்தில் சரித் அசலங்கா ஆட்டமிழந்தார்; அடுத்த பந்தில் துஷான் ஹேமந்தா ஆட்டமிழந்தார். பத்து ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்தது.
தோல்வி அந்த அணியின் கண் முன்னே தாண்டவம் ஆடியது. அதன் பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸ் 12 ரன், தீக்ஷணா ஆட்டமிழக்காமல் 12 ரன், ரஜிதா 14 ரன் எடுத்தனர். 19.4 ஓவரில் இலங்கை அணி 55 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஒரு மோசமான தோல்வியைப் பெற்றது. இந்திய அணியின் முகம்மது ஷமி 5/18, முகம்மது சிராஜ் 3/16, ஜஸ்பிரீத் பும்ரா 1/8, ரவீந்தர் ஜதேஜா ¼ ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.
ஐந்து விக்கட் எடுத்ததற்காக முகம்மது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி இந்த வேற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
இலங்கை அணி ஏறத்தாழ இனி அரையிறுதிக்கு தகுதி பெறமுடியாது. நாளை ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் லக்னோவில் விளையாட இருக்கின்றன. இந்தியாவின் அடுத்த ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணியுடன் கொல்கொத்தாவில் நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெறும்.