
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு, காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டமளிப்பு விழாலும் பங்கேற்று, இன்று மதியம் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். ஏர் இந்தியா விமானம் மூலம், மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த ஆளுநருக்கு வழக்கத்தைக் காட்டிலும் இந்த முறை கூடுதலாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மதுரை விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டன.
ஆளுநர் ஆர். என் ரவி. – திருக்குறள் எனக்கு மிகவும் பிடிக்கும்!
மதுரை காமராஜ் பல்கலையின் 55வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர், விழா முடிந்த பின் பதக்கம் பெற்ற பிஎச்.டி., முதுகலை, இளங்கலை மாணவர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது அவர், “ஐ.பி.எஸ்., பணி, ஆளுநர் பதவி இதில் எதில் எளிது, ஆர்வம் உள்ளது என கேட்கின்றீர்கள். எந்தப் பணியைச் செய்தாலும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். விரும்பிச் செய்ய வேண்டும். அப்படித்தான் என் பணிகள் எதுவாக இருந்தாலும் விரும்பிச் செய்கிறேன். நேர்மையாக நடக்கிறேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடந்து சென்றுதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். ஆர்வம் காரணமாக கல்வியைப் புரிந்து படித்தேன். தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை. அனைவரும் அதைப் படிக்க வேண்டும்.
மாணவர்கள் ஆழமாகப் படித்தால்தான் கற்ற கல்வி மனதில் நிற்கும். வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக இரவில் அதிகம் நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாலை படிப்பு தான் சிறந்தது. நான் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது இல்லை. மாணவர்கள் தேவையின்றி அலைபேசியில் மூழ்கியிருக்காதீர்கள். உங்களுக்கு என ஒரு வாழ்க்கை, இலக்கு உள்ளது. அப்துல்கலாம் கூறியது போல் ஒவ்வொருவரும் தூங்கவிடாமல் செய்யும் ஒரு கனவைக் காணுங்கள். அந்தக் கனவு பெரிதாக இருக்க வேண்டும். அது உங்களைத் துரத்த வேண்டும். அப்போது தான் அதை உங்களால் அடைய முடியும். பதக்கம் பெற்ற நீங்கள் சாதாரண மாணவர்கள் இல்லை. உங்களுக்காக இலக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதை அடைய மென்மேலும் உழைக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நேர மேலாண்மை மிக அவசியம். திட்டமிட்டு படியுங்கள். வாழ்க்கையில் சாதிக்கலாம்” என்று பேசினார்.
முன்னதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்வு கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த தமிழக ஆளுநர் ரவியை, மாவட்ட ஆட்சியர் சங்கீதா வரவேற்றார். ஆளுநர் பல்கலைக்கழக விடுதியில் ஓய்வெடுத்த பின் ,மதுரை காமராஜர் பல்கலை.,யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழாவைப் புறக்கணித்தார். அப்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆளுநர் வரும்போது அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்பதற்காக மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிவப்பிரசாத் ஆலோசனை பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். ஆளுநர் வருகையை ஒட்டி, மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு தமிழக ஆளுநர் ரவி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்காக புறப்பட்டுச் சென்றார்.
மதுரைக்கு ஆளுநர் வருகையை ஒட்டி, அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கருப்புச் சட்டை அணிபவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை. திமுக கொடியுடன் வந்த ஒரு காரில் இருந்து திமுக கொடி அகற்றப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு வழிச்சாலை நுழைவாயில் கீழக்குயில்குடி விளக்கு மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் உடைமைகளை சோதனை செய்து பின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதித்தனர். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55லது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருவதையொட்டி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களை கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.
கடந்த காலங்களில் ஆளுநர் கார் மீது திமுக.,வின் கூட்டணிக் கட்சியினரால் கொடிக்கம்பங்கள், கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுகுறித்து தாம் புகார் அளித்தும், திமுக., அரசின் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்று போலீஸார் கவனத்துடன் செயல்பட்டார்கள்.